எடப்பாடி பக்கம் போகவில்லை.. எஸ்பி வேலுமணி தான் எனக்கு தலைவர்.. கேசி வீரமணி விளக்கம்
திருப்பத்தூர்: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அணியில் செயல்பட்டு வரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ கேசி வீரமணி அங்கிருந்து எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறியதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு கேசி வீரமணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு சிவி சண்முகம், வேலுமணி தலைமையில் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் 47 எம்எல்ஏக்கள் 2 அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் எஸ்பி வேலுமணி அணியினர் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அதிமுக எம்எல்ஏவான கேசி வீரமணி உள்ளார். இதனால் சமீபத்தில் அவரை கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்தார். கேசி வீரமணி திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டு அதிமுக மாநில மருத்துவரணி செயலாளராக இருந்த பசுபதி அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் இன்று காலை முதல் கேசி வீரமணி, எஸ்பி வேலுமணியின் அணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை கேசி வீரமணி மறுத்துள்ளார். இதுதொடர்பாக கேசி வீரமணி விளக்கம் அளித்தார். அப்போது அவர், ''அதிமுக சார்பில் நாங்கள் சபாநாயகரிடம் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் சில தொலைக்காட்சிகளில் மாற்றி சொல்கிறார்கள். எங்களை பொறுத்தவரை கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான். நாங்கள் சிவி சண்முகம், வேலுமணி தலைமையில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்'' என்றார்.
முன்னதாக சேி வீரமணி, அணி மாறுவதாக வெளியான தகவலுக்கு முக்கிய காரணம் அவரது பேச்சு தான். அதாவது திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் பேசிய கேசி வீரமணி, '' தேர்தலில் நான் வெற்றி பெற்று இருந்தாலும் வரும் காலத்தில் தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் ஆளும் கட்சியின் ஆதரவு வேண்டும். இதனால் தான் ஆளும் கட்சியான தவெகவிற்கு ஆதரவு அளித்தேன். தவெகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர்.
இந்த நிர்பந்தத்தால் ஆதரவு அளித்துவிட்டு விட்டேன். இனி வரும் காலங்களில் எனது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருப்பார்'' என்று கூறினார். இதனால் தான் அவர் அணி மறுவதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது அவரே மறுப்பு தெரிவித்து பரவும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.













Click it and Unblock the Notifications