ரஜினியை மோடி சந்தித்ததால் வருத்தமா?: விஜயகாந்த் விளக்கம்
சென்னை: ரஜினிகாந்த் வீட்டுக்கு நரேந்திர மோடி போனதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கு சுற்றுலா போனா கூட கிட்னி ஆபரேசன் செய்யப் போனதாக செய்தி போடுறாங்களே என்று ஊடகங்களை தாக்கினார் விஜயகாந்த்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக டாக்டர் ஈஸ்வரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் உடையார்பாளையம் காந்தி சிலை அருகில் நேற்று மாலை திறந்த வேனில் நின்று தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரே ஊழல்தான்
இதுவரை தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்கின்றவர்களும் ஊழலுக்கு மேல் ஊழல் செய்து வருகிறார்கள். நான் என்ன கேட்கிறேன், என் மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்கவா சொல்கிறேன்.

விலைவாசி உயர்வு
தற்போது விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அதை சரி செய்யுங்கள் என்கிறேன். ஆனால், அதை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாக்குறுதி நிறைவேற்றவில்லை
ஜெயலலிதாவை கேட்டால் மத்திய காங்கிரஸ் அரசுதான் இதற்கு காரணம் என்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் 25 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், அவர் எதையும் நிறைவேற்றவில்லை.

வெண்தாடி வேந்தர்
மக்களுக்கு அடிப்படை-அத்தியாவசிய தேவையான குடிநீர், மின்சாரம் சீராக கிடைத்திட வெண்தாடி வேந்தர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்.

கருத்து வேறுபாடு இல்லை
எங்களுக்குள் கருத்து வேறுபாடு என்று சொல்கிறார்கள். ரஜினிகாந்த் வீட்டிற்கு நரேந்திர மோடி சென்றதால் விஜயகாந்துக்கு வருத்தம் என்கிறார்கள்.

சிங்கப்பூர் மருத்துவமனையில்
எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அப்படி இருந்தால் நான் உங்களிடம் இப்படி வந்து நின்று பேச முடியுமா? எதை வேண்டுமானாலும் சொல்லக்கூடாது. சும்மா டேபிளில் உட்கார்ந்து கைக்கு கிடைத்ததை எழுதக்கூடாது என்று ஊடகங்களை தாக்கினார்.

கும்பிடு போடுங்க..
தொடர்ந்து அதிமுகவில் எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை முதல்வர் ஜெயலலிதாவிற்கு எப்படி வணக்கம் வைக்கின்றனர் என்றும் நடித்துக் காட்டினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications