‘எனக்கு பாஜக மேல பயமில்லை..’ அதுக்கு இதுதான் சாம்பிள்.. சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பஞ்ச்
சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் வழக்குகளுக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக திமுக கூட்டணியில் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவை பார்த்து எனக்கு பயமில்லை என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக பயணித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சிதம்பரம் சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் நடுங்குகிறீர்கள். அதிமுகவைப் பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. திமுக மத்தியில் 16 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு திமுக வீர வசனம் பேசுகிறது. நாட்டு மக்களைப் பற்றி திமுகவுக்கு கவலை இல்லை.
பயிரை வேலி காப்பது போல, நாட்டு மக்களுக்கு அரசு பாதுகாப்பளிக்க வேண்டும். சட்டம் சந்தி சிரிக்கிறது. பொம்மை முதலமைச்சரை வைத்துக் கொண்டு நாட்டை எப்படி பாதுகாக்க முடியும். திமுக கூட்டணி கட்சியினருக்கு மக்கள் பிரச்னையை பற்றி கேட்பதற்கு வக்கில்லை. கூட்டணி கட்சிக்கு ஸ்டாலின் வேட்டு வைக்கிறார்.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டுக்கும், விசிக கொடி கம்பம் வைப்பதற்கும் கூட அனுமதி கொடுக்கவில்லை. இவ்வளவு அசிங்கப்பட்டும் அந்தக் கூட்டணியில் வைக்க வேண்டுமா. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ரத்தின கம்பளத்தை விரிக்கும். 2026 தேர்தலில் அதிமுக பிரம்மாண்ட வெற்றி பெறும். தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மத்தியில் 16 ஆண்டு ஆட்சியில் இருந்து மக்களுக்கு எதுவும் செய்யாமல், பாஜகவை அன்றாடம் விமர்சிப்பதை முதலமைச்சர் வாடிக்கையாக வைத்துள்ளார். இது மாநிலத்துக்கு வர சட்டமன்ற தேர்தல். இது நாடாளுமன்ற தேர்தல் இல்லை. இப்போது பாஜகவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், எங்கள் கூட்டணி வேட்பாளர் இபிஎஸ் என அமித்ஷா கூறிவிட்டார்.
பிறகு ஏன் இதைப்பற்றி ஸ்டாலின் பேசுகிறார். எதைப்பற்றியாவது பேசி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். அவருக்கு மாநிலத்தில் நடக்கும் தேர்தலுக்கும், மத்தியில் நடக்கும் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. கடந்த அதிமுக ஆட்சி குறித்து விமர்சிக்க முடியாததால் என்னவெல்லாமோ விமர்சிக்கிறார். பாஜகவை பார்த்து நான் பயப்படவில்லை. அதிமுகவில் உள்ள ஒரு தொண்டனைக் கூட யாரும் அச்சுறுத்தி பார்க்க முடியாது.
பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை. அதிமுக தொண்டன் யாருக்கும் பயப்பட மாட்டான். மக்களிடம் அதிமுகவுக்கு கிடைத்துள்ள எழுச்சி தேர்தல் வெற்றியை உறுதி செய்துவிட்டது. ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் திமுக யாரின் காலில் வேண்டுமானாலும் விழும். எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜகவுக்கு எதிராக கருப்பு கொடி விட்ட ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் மோடிக்கு வெள்ளைக் குடை பிடித்தார்.
திமுக ஆட்சி எப்போது அகற்றப்படும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா துறையிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. கடந்த 6 மாதங்களில் 730 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் காட்சியளிக்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications