அம்மாவின் காலடியில் என் பயணம் தொடரும்... நாஞ்சில் சம்பத்
சென்னை: எனக்கு ஆபத்தான காலக்கட்டத்தில் அரசியலில் அடைக்கலம் தந்து, மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தபோது என் உயிரை மீட்டு தந்த அம்மாவின் காலடி சுவட்டை ஒட்டி என் பயணம் தொடரும் என்று அதிமுகவின் முன்னாள் துணை கொ.ப.செ நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். திமுகவில் இணையப்போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக விளங்கியவர் நாஞ்சில் சம்பத். இவர், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சிக்காக பிரசாரம் செய்து வந்தார். இவரது கூட்டத்துக்கு தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதனால் தினமும் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு ஆடம்பரமாக நடந்ததாகவும், போயஸ்கார்டனில் இருந்து திருவான்மியூர் வரை சுமார் 10 கி.மீ. தூரம் கட் அவுட், பேனர், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி, அதிலிருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இந்த ஆடம்பரமான பொதுக்குழு கூட்டம் தேவைதானா என்று டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது.
இதுகுறித்து பதிலளித்த, நாஞ்சில் சம்பத் எறும்புகள் செல்கின்றன என்பதற்காக யானைகள் நடக்காமல் இருக்க முடியுமா? என்று கேட்டதோடு ஒரு வீட்டில் இழவு விழுந்தது என்பதற்காக, பக்கத்து வீட்டில் திருமணம் நடத்தாமல் இருக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது.
இதனால் கட்சித்தலைமையின் கோபத்திற்கு ஆளானதோடு நாஞ்சில் சம்பத்தின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. கட்சியினர் அவரை வைத்து பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டதால், அவருடைய கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். இதனால் இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். கட்சி கரை போட்ட வேட்டியைக் கூட அவர் கட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத். யாராவது வாந்தி எடுக்கிற வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் அ.தி.மு.க.வில்தான் நீடிக்கிறேன் என்கிறார் உறுதியாக.

அம்மாவின் காலடி
தேர்தல் பிரசாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து, அதற்காக செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆபத்தான காலக்கட்டத்தில் அரசியலில் அடைக்கலம் தந்து, மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தபோது என் உயிரை மீட்டு தந்த அம்மாவின் காலடி சுவட்டை ஒட்டி என் பயணம் தொடரும் என்று கூறியுள்ளார்.

ஜெயகாந்தன் நூல்கள்
நான் என்னுடைய கிராமத்து வீட்டில் இருந்து கொண்டு ஜெயகாந்தனின் சிறுகதைகள் இரண்டு தொகுப்பு, ஜெயகாந்தனின் முத்திரை கதைகள், குமரகுருபரரின் பிரபந்தங்கள் இரண்டு தொகுப்பு, விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதி கூறியது, பிள்ளைப் பெருமான் அய்யங்கார் எழுதிய அச்சபிரபந்தம் ஆகிய நூல்களை வாசித்து கொண்டிருக்கிறேன்.

வலைத்தள வைரஸ்கள்
எந்த சலனத்திற்கும் ஆட்படாமல் என் வீட்டில் உட்கார்ந்து நான் அமைதியாக படித்துக் கொண்டிருக்கிறேன்.வலைத்தளங்களில் வருகின்ற செய்திகளை நான் பார்ப்பதில்லை. ஆகவே, இதுபோன்ற வலைத்தளங்களில் வைரஸாக வரும் இந்த ஆபத்தான செய்திகளை கண்டு யாரும் ஏமாற வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
|
நகராத அம்மியா?
நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிலுக்கும் கிண்டலடித்து பதிவிட்டுள்ளனர் வலைத்தளவாசிகள்.
|
இன்னொரு பேட்டி
நாஞ்சில் சம்பத்திற்கு ஆப்பு வச்சதே பேட்டிதான். அப்போ இன்னொரு பேட்டி வச்சு கட்சியை விட்டே கட்டம் கட்டிவிடலாமா என்று கேட்கின்றனர் சிலர்.












Click it and Unblock the Notifications