வயலில் களை எடுக்கணும்! கலெக்டர் ஆபிசிலிருந்து கூலி வேலைக்கு ஆள் அனுப்புங்க! விவசாயி விரக்தி மனு!
தென்காசி: 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்றும் இதனால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருப்பின் அவர்களை தனது நிலத்தில் களை எடுக்க DEPUTATION ல் அனுப்பி வைக்குமாறும் மனு கொடுத்து அதிர வைத்திருக்கிறார் விவசாயி ஒருவர்.
விவசாயி கொடுத்த இந்த மனு மாவட்ட ஆட்சியரை அதிர வைக்கும் வகையில் இருக்கிறது. விவசாயி மகேஸ்வரன் கொடுத்த மனுவின் விவரம் வருமாறு;

மனுதாரர்:
த மகேஸ்வரன்,
7-133 வடக்கு தெரு, பாறைப்பட்டி,
நெல்கட்டும் செவல் கிராம பஞ்சாயத்து,
சிவகிரி தாலுகா தென்காசி மாவட்டம்-627758
பெறுநர்:
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தென்காசி.
ஐயா,
''மேற்படி முகவரியில் குடியிருந்து வரும் நான் சிவகிரி தாலுகா நெல்கட்டும் செவல் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பிப்ரவரி-ஜுன் ல் கோடைகால பருவத்திலும் செப்டம்பர்-ஜனவரியில் மழைகாலத்திலும் பயிர் செய்து வருகிறோம்.
இரு பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரை களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்கும் கடைசி 30 நாட்கள் வரை அறுவடைக்கும் கூலி ஆட்கள் அதிக அளவில் தேவை. ஆனால் ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும் அறுவடை நேரத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனும் 1080 நாட்கள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று விடுகின்றனர்.
இதனால் பயிரின் முக்கிய பிரச்சனையான களையெடுப்பிற்கு ஆட்கள் கிடைக்காமல் சில வருடங்களாக நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 7 மணி நேர வேலை என்பது 100 நாள் வேலையின் காரணமாாக 4 மணி நேரமாக சுருங்கி விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு மேலும் அதிகமாகி விட்டதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளோம். நான் சுமார் 3 ஏக்கர் பரப்பில் தற்போது பருத்தி பயிர் செய்துள்ளேன்.
எங்கள் பகுதியில் தற்போது MGNREGS திட்ட வேலை நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே தங்கள் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை எனது நிலத்தில் களை எடுக்க DEPUTATION ல் அனுப்பி வைத்து உதவ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு அவர்களை அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கூலி பஞ்சப்படி(D.A) பயணப்படி (T.A)மதிய உணவு அளதைதும் கொடுக்க தயாராக உஸ்ளேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் எனது நிலத்தின் புகைப்பட நகலையும் இணைத்துள்ளேன்.''
நன்றி!
இவண்
ஏன் விவசாயியாக பிறந்தோம் என்று வெந்து நொந்து போயிருக்கும் பாவப்பட்ட விவசாயி
இவ்வாறு அந்த மனுவில் விவசாயி மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications