டைனோசர் ஆய்வில் கிடைத்த முக்கிய "க்ளூ" இந்தியாவில் வாழ்ந்த புது இனம்? வியக்க வைக்கும் புது தகவல்!
வாஷிங்டன்: டைனோசர்கள் குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு டைனோசரின் புதைபடிமங்கள் கிடைத்தன. இது குறித்த ஆய்வு நடைபெற்ற நிலையில், தற்போது முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஒன்று டைனோசர். ஆனால் இந்த உயிரினம் முற்றிலும் அழிந்துவிட்டது. இந்த உலகத்தில் சுமார் 243 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டேனாசர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த இனம் முற்றிலும் அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உண்மையில் டைனோசர் இனம் இருந்ததா? என்பது குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர். இதற்காக டைனோசர் பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடயங்களை திரட்ட விஞ்ஞானிகள் குழுவினர் முழு ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... ஏன் டைனோசர் குறித்தான படங்கள் கூட வசூலில் சாதனை படைக்கும் அளவுக்கு சக்கை போடு போட்டுள்ளது.
ராஜஸ்தானில் படிமங்கள்: மக்களுக்கு டைனோசர் மீதான ஆர்வம் இன்றளவும் சற்றும் குறையாமல் இருப்பதே இதற்கு காரணம். அவ்வப்போது டைனோசரின் கால் தடங்கள் மற்றும் முட்டைகளின் படிமங்கள் கிடைத்துள்ளதாகவும் அதை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. வெளிநாடுகளில் மட்டும் இல்லை, இந்தியாவிலும் டைனோசரின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் டைனோசரின் படிமங்கள் கிடைத்து இருப்பதாகவும் அதை வைத்து நடக்கும் ஆராய்ச்சியில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருவதும் கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகளில் வெளியாகி வருகின்றன. ராஜஸ்தானின் மேற்கு நகரமான ஜெய்சல்மரில் தாவரங்களை உண்டு வாழும் கழுத்து நீளமான டைனோசரின் படிமங்கள் கிடைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
டைனோசரின் புதிய இனம்: இந்த டைனோசர்கள் 167 மில்லியன் ஆண்டுகள் அதாவது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமிப்பந்தில் வாழ்ந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ருர்க்கியில் உள்ள ஐஐடி விஞ்ஞானிகள் மற்றும் இந்திய தொல்லியல் சர்வே (GSI) வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்தை சேர்ந்தவற்றை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.. நேட்சர் இதழில் 'Scientific Reports'என்ற பெயரில் வெளியாகியிருக்கும் ஆய்வில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, ஜெய்சல்மாரில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமங்கள் டைனோசரின் புதிய இனமாக இருக்கலாம் என்றும் மனிதர்கள் இதுவரை அறிந்திராத ஒரு இனத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் எனவும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு டைனோசரின் புதைபடிமங்கள் கிடைத்தன. இந்த டைனோசர் படிமங்களுக்கு 'தாரோசரஸ் இண்டிகஸ்' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர்.
கழுத்து நீளமானவை: இந்த படிமங்களை ஐஐடி மற்றும் இந்திய புவியியல் ஆய்வு துறையை சேர்ந்த 6 விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு இந்த முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், " 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறைகளில் படிமங்கள் கிடைத்ததில் இருந்து, இந்தியன் sauropod டைனோசர் (கழுத்து நீளமானவை) டிக்ரேயோசொரிட்(dicraeosaurid) டைனோசர் இனங்களில் மிக பழமையானது மட்டும் இன்றி உலக அளவிலும் மிக பழமை வாய்ந்த diplodocoid இன டைனோசராக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதற்கு முன்பாக டிக்ரேயோசொரிட் வகை டைனோசர்களின் படிமங்கள் வட மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டன. இந்தியாவில் கண்டறியப்படாமல் இருந்தது. டைனோசரின் புதைபடிமங்கள் கண்டறியப்படதன் மூலம், டைனோசர் பரிணாம சுழற்சியில் இந்தியாவும் சிறிய அதேவேளையில் எதிர்பாரத பங்களிப்பை கொண்டு இருந்ததை பரிந்துரைப்பதாக ஆய்வாளர்கள் கூறும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications