கட்சிகளின் பணப்பட்டுவாடா குறித்து உஷார்படுத்திய பொதுமக்கள்... தேர்தல் ஆணையம் ஹேப்பி!
சென்னை: தமிழத்தில் அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடா குறித்து பொதுமக்கள் அளித்த புகர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தது.
தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 100 கோடிக்கும் மேலான பணம் சிக்கியது. மேலும் ரூ.1.30 கோடி மதிப்புள்ள சேலை மற்றும் வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் முக்கியமானது என்னவென்றால் பணப் பட்டுவாடா குறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து 33 புகார்கள் வந்ததாம். அதன் மூலம் பெருமளவிலான பணத்தை பறிமுதல் செய்ய முடிந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தலின் போது எப்போதுமே பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பணப் பட்டுவாடாவை தடுப்பதுதான் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கும் மிகப் பெரிய சவாலாகும். இந்த முறை ஊடகங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டது தேர்தல் ஆணையத்திற்கு உதவியாக இருந்தது.
ஆனால் அதையும் தாண்டி வேட்பாளர்கள் பலர் தேர்தல் அதிகாரிகளை ஏமாற்றி பலவழிகளில் வாக்காளர்களைக் "கவனிக்க" முயற்சி செய்தனர். ரூ.1.30 கோடி மதிப்பிலான சேலை மற்றும் வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதில் ஒன்றாகும்.
தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது, வாகனங்களில் பணம் கொண்டு செல்வது பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனாலும், ஆம்புலன்ஸ் மூலமாக பணம் கொண்டு செல்லப்பட்டது இந்த முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பதிவு செய்யாதவை ஆகும். இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்து கட்டுக்கட்டான பணம் மற்றும் பணம் என்னும் இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கட்சிதான் என்றில்லாமல், அனைத்து முக்கியக் கட்சிகளும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக வேட்பாளர்கள் தாங்கள் செலவு செய்யவேண்டிய தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளனர். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர். அவைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில்தான், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அளித்த 33 புகார்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
