யாராக இருந்தாலும் அடி தான்! மிரள வைத்த மோதிரங்கள்! சட்டசபையில் பாய்ச்சல் காட்டிய தாமரைக்கனி!
சென்னை: ஒரு காலத்தில் தமிழக சட்டசபையில் ஆக்ஷன் கிங்காக வலம் வந்து தனது மோதிரங்களால் மிரள வைத்த மறைந்த தாமரைக்கனியை பற்றித் தான் இன்றைய Throw back stories வரிசையில் பார்க்க இருக்கிறோம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாமரைக்கனி. பள்ளிப்பருவம் முதலே எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகனாக இருந்த இவர், தியேட்டரில் படம் பார்க்கும் போது எம்.ஜி.ஆரை நம்பியார் அடிக்க வரும் காட்சிகள் வந்தால் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவரை புரட்டி எடுத்துவிடுவார் தாமரைக்கனி.

இந்த நிகழ்வை வைத்தே எம்.ஜி.ஆர். மீது தாமரைக்கனிக்கு எந்தளவுக்கு வெறித்தனமான பற்று இருந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுமான் கானை சட்டசபையில் பாய்ந்து வந்து தனது மோதிரக் கையால் பதம் பார்த்தார்.
அதேபோல் செல்லக்குமார், வீரபாண்டி ஆறுமுகம், பண்ருட்டி ராமச்சந்திரன் என பலரையும் சட்டசபையில் வைத்தே அடித்து துவம்சம் செய்தவர் தாமரைக்கனி. தனக்கு கோபம் வந்துவிட்டது என்றால் யாராக இருந்தாலும் அடி தான் என்பதை பல நிகழ்வுகளில் இவர் உணர்த்தினார்.
இதனாலேயே எதிர்க்கட்சி கரைவேட்டியினர் தாமரைக்கனியிடம் எதற்கு வம்பு என ஒதுங்கிய நிகழ்வுகள் எல்லாம் நடந்ததுண்டு. இப்போது இருப்பது போல் பெரியளவில் ஊடகங்களோ, சமூக வலைதளங்களோ இல்லாத காலம் அது என்பதால் தாமரைக்கனியின் தடாலடிகள் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல சொந்தக் கட்சியினருக்கே கிலியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் இணைந்த தாமரைக்கனி ஜானகி அம்மையாருக்கு பக்கபலமாக நின்றார். 1991 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் சீட் கேட்டு செல்லாமல், தனது ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் சுயேச்சையாக ஏணி சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.

அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடித்து சுயேச்சை வேட்பாளரான தாம் வெற்றி பெற்று தமிழகத்தை தன்னை திரும்பி பார்க்க வைத்தார் தாமரைக்கனி. இவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கா என ஜெயலலிதாவே வியந்து போனார்.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதா தலைமையை ஏற்று மீண்டும் அதிமுகவில் இணைந்து பயணித்த தாமரைக்கனி, 1996 -2000 கால கட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி சேர்மனாகவும் இருந்தார். இரண்டு பதவிகளில் இருந்த தாமரைக்கனி கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்து தனது இறுதிக்காலத்தில் வெளியேறி திமுகவில் இணைந்தார்.
இதனிடையே தாமரைக்கனியின் விரல்களில் தீப்பெட்டி சைஸ்களில் அவர் அணிந்திருக்கும் முரட்டு மோதிரங்கள் தான் பார்ப்பவர்களை மிரள வைக்கும். மூவேந்தர் திரைப்படத்தில் சரத்குமார் தனது மோதிரத்தால் தழும்பு போடுவது போல் தன்னை எதிர்ப்பவர்களின் முகத்தில் தழும்பு போடுவதற்காகவே இந்த மெகா மோதிரங்களை அணிந்திருந்தார் தாமரைக்கனி.

2001 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் திமுக சார்பில் தாமரைக்கனி நிறுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து அவர் பெற்ற பிள்ளையான இன்பத்தமிழனை களமிறக்கி விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார் ஜெயலலிதா.
அரசியலில் பலருக்கும் தண்ணீர் காட்டிய தாமரைக்கனி, கடந்த 2005ஆம் வருடம் தனது 59வது வயதில் மதுரையில் காலமானார். என்னதான் கோபக்காரர், முரட்டுத்தனமானவர் என்றாலும் கூட பதவிக்காக யார் முன்பும் குணிந்து நிற்காமல், சலாம் போடாமல், தனது சொந்த செல்வாக்கை மட்டுமே நம்பியிருந்தவர் தாமரைக்கனி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications