அமைச்சருக்கு நெருக்கம்..செந்தில் கார்த்திகேயன் வீடு, ஆபீசில் சல்லடை போடும் ஐடி ஆபீசர்ஸ்! யார் இவர்?
கோவை : கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி வருவதால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், சகோதரர், நெருக்கமானவர்கள் என பலரது வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களிலும் சோதனையும் நடைபெற்று வருகிறது.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 22 இடங்களிலும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐ.டி அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அதிமுகவிலிருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்தவர் செந்தில் கார்த்திகேயன். அதிமுகவில் எம்.ஜி.ஆர். இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார் செந்தில் கார்த்திகேயன். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஆதரவாளராக இருந்தார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மேயராக வரக்கூடியவர் என்ற நிலையில் செந்தில் கார்த்திகேயனின் மனைவி கிருபாலினி கார்த்திகேயன் பெயர் அடிபட்டது.
கிருபாலினி கார்த்திகேயன் தான் அடுத்த மேயர் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஆனால், செந்தில் கார்த்திகேயனின் மனைவி கிருபாலினி கார்த்திகேயன் தோல்வியடைந்தார். அதோடு கோவை மாநகராட்சியில் அதிக இடங்களை திமுகவே கைப்பற்றியது.

அதன்பிறகும், செந்தில் கார்த்திகேயன் மற்றும் கிருபாலினி இருவருமே அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் செந்தில் கார்த்திகேயன் கடந்த டிசம்பர் மாதம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் திமுகவில் இணைந்தார் செந்தில் கார்த்திகேயன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் செந்தில் கார்த்திகேயன். அதிமுகவிலிருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாகிப் போன செந்தில் கார்த்திகேயன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் சல்லடை போடுவதால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications