கிருஷ்டி நிறுவனங்களில் 2-வது நாள் நடந்த ஐடி ரெய்டு.. ரூ.4 கோடி பறிமுதல்!
கிருஷ்டி சத்துமாவு தயாரிப்பு மற்றும் முட்டை நிறுவனத்தில் 2-வது நாளாக ரெய்டு நடைபெற்று வருகிறது.
Recommended Video

நாமக்கல்: கிருஷ்டி நிறுவனங்களில் 2வது நாளாக இன்று நடைபெற்ற வருமான வரி சோதனையில், ரூ.4 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வெளிநாட்டு கரன்சிகளையும் முக்கிய ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் கிருஷ்டி ஃபிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை மற்றும் சத்துமாவினை விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பல போலி நிறுவனங்களை உருவாக்கி, முட்டை, பருப்பு, சத்துணவு மாவு சப்ளை செய்ததுபோல இந்த நிறுவனம் கணக்கு காட்டியுள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதன் காரணமாக, நாமக்கல் மாவட்டத்திலும், திருச்செங்கோடு அருகே உள்ள கிருஷ்டி நிறுவனத்திலும், அதன் உரிமையாளர் குமாரசாமி வீட்டிலும் வருமான சோதனைகளில் நேற்று காலை முதல் ஈடுபட்டனர். சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் கிருஷ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 2-வது நாளான இன்றும் கிருஷ்டி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ராசிபுரம் அடுத்த அத்தனூர், புதுசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை காலையிலேயே நடத்த தொடங்கிவிட்டனர்.
நேற்றைய சோதனையின் முடிவில், ஏராளமான ரொக்க பணமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரூ.4 கோடி அளவுக்கு ரொக்கப் பணத்தினை பறிமுதல் செய்த அதிகாரிகள், வெளிநாட்டு கரன்சிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications