"இருக்கு ஆனா இல்லை".. இந்திய ஜனநாயக கட்சியும் விருப்ப மனுக்களை வரவேற்கிறது..!
சென்னை: பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியும் சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்களிடம் விருப்ப மனு கேட்டுள்ளது.
மக்களவை தேர்தலின்போது, இந்திய ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணியில் இணைந்திருந்தது. இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலின்போது, தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
"இந்திய ஜனநாயக கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளாக உள்ள காவிரி, முல்லைப் பெரியாறு, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி உள்ளோம்.

கடந்த மாதம் தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எங்களது கட்சியின் 68 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டபோது அவர்களில் பெரும்பாலானோர் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று கூறினார்கள்.
அவர்களின் விருப்பப்படி நாங்கள் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்" என்று பாரிவேந்தர் கூறியிருந்தார். இதனிடையே, வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று இந்திய ஜனநாயக கட்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல், விருப்பமனுக்களை தாக்கல் செய்யலாம்.
தமிழக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்வோருக்கு, ரூ.1000 கட்டணமாகவும், புதுச்சேரி மற்றும் பொதுத்தொகுதிகளில் போட்டியிடுவோருக்கு ரூ.500 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிககுறைவான வாக்கு சதவீதமே கொண்டுள்ள இந்திய ஜனநாயக கட்சி, தேர்தலில் தாங்களும் இருப்பதாக காட்டிக்கொள்ளும் வகையில், வேட்புமனுக்களை கேட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications