தமிழகத்தில் மீண்டும் சிங்கள படையினருக்கு ராணுவ பயிற்சி? டெல்லியில் இலங்கை கடற்படை தளபதி முகாம்!
தமிழகத்தில் சிங்கள படையினருக்கு மீண்டும் ராணுவ பயிற்சி வழங்கப்படும் என டெல்லியில் முகாமிட்டுள்ள இலங்கை கடற்படை தளபதி விஜயகுணவர்த்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் சிங்கள படையினருக்கு மீண்டும் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்று இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி வந்துள்ள இலங்கை கடற்படை தளபதி விஜயகுணவர்த்தன மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர வேண்டும்; சுதந்திர தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

ஜெ. கடும் எதிர்ப்பு
அத்துடன் தமிழகத்தின் நீலகிரி வெலிங்டன் மற்றும் தாம்பரம் ராணுவ முகாம்களில் இலங்கை படையினருக்கு ராணுவ பயிற்சி அளிக்கவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ஜெயலலிதா. அதேபோல் சிங்கள விளையாட்டு வீரர்கள் தமிழகத்துக்கு நுழையவும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

டெல்லியில் முகாம்
தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் மீண்டும் தமிழகத்தில் சிங்கள படையினருக்கு ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லி வந்துள்ள இலங்கை கடற்படை தளபதி விஜயகுணவர்த்தன இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

நெருக்கடி தரும் மத்திய அரசு?
ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த மத்திய அரசின் பல திட்டங்களுக்கு தற்போதைய தமிழக அரசு அடுத்தடுத்து ஒப்புதல் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கும் விவகாரத்திலும் தமிழக அரசுக்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புள்ளது.

ஜல்லிக்கட்டு புரட்சி தாக்கம்
அதேநேரத்தில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டு புரட்சியை நடத்தியுள்ளனர். இந்த புரட்சியின் தாக்கம் ஓயாத நிலையில் சிங்கள படையினருக்கான பயிற்சிக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications