கடலூரில் 5 நிமிடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் வாய்ப்பை இழந்த சுயேட்சை
கடலூர்: கடலூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 5 நிமிடம் தாமதமாக வந்ததால், அவரது மனுவை வாங்க முடியாதென கோட்டாட்சியர் திருப்பியனுப்பி விட்டார்.
கடலூர் சட்டசபைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக எம்.சி. சம்பத்தும், திமுக வேட்பாளராக வழக்கறிஞர் இள. புகழேந்தியும் மனு தாக்ல் செய்துள்ளனர்.

கடந்த 22ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தமாகா வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் மனுத்தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் 3 மணி வரையில் யாரும் வராத நிலையில், மனுத்தாக்கல் முடிந்தது என்று அலுவலக வாசலில் நின்றுக் கொண்டிருந்த போலீசார் நினைத்திருந்தனர். அப்போது திடீரென ஒருவர் வேகமாக அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார், தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிந்து விட்டதாக போலீசார் கூறியும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திப்பதாக கூறி உள்ளேச் சென்றார்.
கோட்டாட்சியரான தேர்தல் நடத்தும் அலுவலர் நா.உமாமகேஸ்வரியை சந்தித்து வேட்புமனுத்தாக்கலுக்கான ஆவணங்களை வழங்கினார். ஆனால் மணி 3.05 ஆகியிருந்ததால் மனுவை வாங்க முடியாதென திருப்பியனுப்பினார். 5 நிமிடத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு தவற விட்ட சோகத்தில் திரும்பினார் அந்த வேட்பாளர்.
ஏமாற்றமடைந்த வேட்பாளரின் பெயர் கு.தங்கராசு, 59 என்பதாகும். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கப்பியாம்புலியூரைச் சேர்ந்த தங்கராசு, கடலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட விரும்பினார். இவர் மனுத்தாக்கலுக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றுச் சென்றுள்ளார். விண்ணப்பத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான சான்றினை பெற்று வருவதற்காக மீண்டும் விழுப்புரம் சென்று வர நேரமாகி விட்டதாக கூறினார் தங்கராசு.












Click it and Unblock the Notifications