சிஎஸ்கே vs மும்பை.. ரசிகர்களுக்கு இலவச பேருந்து பயணம்.. தமிழக அரசுக்கு நஷ்டமா? உண்மை என்ன?
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதனையொட்டி ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க செல்லும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிஎஸ்கே - மும்பை போட்டிக்கு அரசு தரப்பில் இலவச பேருந்து விடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதன் உண்மைத்தன்மையை பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு நடக்கவுள்ள போட்டியில் சிஎஸ்கே - மும்பை அணிகள் விளையாடுகின்றன. உலகம் முழுவதும் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது. இதனை நேரில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர்.

இதனால் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்றுத் தீர்ந்தது. அதேபோல் கள்ளச்சந்தையிலும் டிக்கெட் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இம்முறை ஐபிஎல் நிர்வாகம் 13 மைதானங்களிலும் தொடக்க விழாவை நடத்த முடிவு எடுத்து அதனை செயல்படுத்த உள்ளது.
அந்த வகையில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் "அலப்பறை கிளப்புறோம்" என்று அனிருத் பாடப்போகும் பாடலுக்கு சேப்பாக்கம் மைதானமே அதிரப் போகிறது. குறிப்பாக தோனி ரசிகர்கள் அவரை பார்க்க கூடுதல் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் சேப்பாக்கம் மைதானத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் ஒரு முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுத்துள்ளது. அதாவது சிஎஸ்கே ரசிகர்கள் மாநகராட்சி பேருந்துகளில் தங்களின் போட்டி டிக்கெட்டை காட்டிவிட்டு இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டிக்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவும், போட்டி முடிந்து 3 மணி நேரம் வரையும் இலவசமாக பயணிக்கலாம். ஒருவர் பல பேருந்துகளை பயன்படுத்தியும் மைதானத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக அண்ணா சதுக்கம், சென்னை பல்கலைக்கழகம், ஓமந்தூரார் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அண்ணா சாலைகளில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே - மும்பை போட்டிக்காக தமிழக அரசு தரப்பில் பேருந்துகள் இயக்கப்படுவதாக சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகியது.
இதுகுறித்து விசாரிக்கையில், சிஎஸ்கே ரசிகர்களின் பயணத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் முன்கூட்டியே பணம் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது. பொதுமக்கள் எளிதாக சேப்பாக்கம் மைதானம் வருவதற்காக இந்த வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் சொந்த வாகனங்களில் வரும் ரசிகர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீடு சென்று சேர்வதற்கு நீண்ட நேரமாகும் நிலை உள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் இலவசமாக தண்ணீர் பாட்டில் கூட கிடைக்காது என்பதால், ரசிகர்களின் செலவை குறைக்கும் வகையில் சிஎஸ்கே நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications