மதுவிலக்கு: ஜெயலலிதாவின் இரட்டை வேடமும்….. தமிழினத் தலைவரின் பல்டிகளும்

Subscribe to Oneindia Tamil

- ஆர்.மணி

கடந்த ஜூலை மாதம் ஒன் இந்தியாவில் வெளியான கட்டுரை, மதுவிலக்கு எனும் மாயமான் வேட்டை. அதில் அனேகமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்கு கோரிக்கையே பிரதான பிரச்சாரப் பொருளாக மாறிப் போகும் என்றே எழுதியிருந்தோம். அனைத்து எதிர்கட்சிகளும் மதுவிலக்குக் கோரி போராடிய போது தமிழகத்தில் மது விலக்கு அறவே சாத்தியமற்றது என்று பேசி வந்த அதிமுகவும் தேர்தல் நேரத்தில் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தோம். அதுவேதான் தற்போது நடந்திருக்கிறது.

‘'மதுவிலக்கை ஒரேடியாக அமல்படுத்த முடியாது. படிப்படியாகத் தான் அமல்படுத்த முடியும். அதற்கான வழி வகைகளை ஆராய்ந்து, எனது தலைமையிலான அரசு மீண்டும் அமைந்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்'' என்று ஏப்ரல் 9 ம் தேதி அதிமுகவின் முதல் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறி விட்டார். அடுத்த நாள் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கிற்காக தனி சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுவிட்டது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. அதனைத் தவிர்த்துப் பார்த்தால் அனேகமாக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முறை மதுவிலக்கையே பிரதானப் பொருளாக பேசப் போகின்றன.

Is it possible to have a complete ban on liquor in Tamil Nadu?

அதிமுகவைப் பொறுத்தவரையில் இந்த வாக்குறுதி கேலிக் கூத்தின் உச்சகட்டம் என்றுதான் கூற வேண்டும்.ஏனெனில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு கோரிப் போராடிய பொழுது அதனை எள்ளி நகையாடியது மட்டுமின்றி, இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் மதுவிலக்கு அறவே சாத்தியமற்றது என்றும் பேசியவர்தான் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக்கான அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இதை விட அவலம் மதுவிலக்குக் கோரி போராடியவர்கள் மீது தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்வது. ஆறு மாதங்களுக்கு முன்பு பாடகன் கோவன் மீது தேசத் துரோக வழக்கு... தற்போது கடந்த மார்ச் மாதம் திருச்சியில் மதுவிலக்குக் கோரி மாநாடு போட்டு பாட்டு பாடி பிரச்சாரம் செய்தவர்கள் ஆறு பேர் மீதும் தேசத் துரோக வழக்கு..... ஒருபுறம் மதுவிலக்குக் கோரி போராடுபவர்கள் மீது தேசத் துரோக வழக்கு... மறுபுறம் படிப்படியாக மதுவிலக்கு எனும் மாய்மால வார்த்தைகள்... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேர் விடுதலை கோரி மத்திய அரசுக்கு கடிதம்... மறு புறம் அந்த எழுவரில் ஓரிருவர் வெறும் 15 நாட்கள் பரோல் கேட்டால் கூட, ‘'அவர்களை பரோலில் விட்டால் தமிழகத்தில் அமைதி சீர்கெடும்'' என்று கூறி உயர்நீதிமன்றத்தில்
அதற்கு மிக கடுமையான எதிர்ப்பு.... இதே இரட்டை வேடத்தைத் தான் இன்று மதுவிலக்கு விவகாரத்திலும் ஜெயலலிதா போடத் துவங்கியிருக்கிறார் என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை ....

இவையெல்லாம ஒரு பக்கம் இருக்கட்டும்... உண்மையிலேயே தமிழகத்தில் இன்று மதுவிலக்கு சாத்தியமானது தானா என்பதுதான் முக்கியமான கேள்வி...

2015-2016ம் ஆண்டில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் சுமார் 27,000 கோடி ரூபாய். இது 2016-2017ல் 30,000 கோடி ரூபாய் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் வருவாயில் இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு. மேலும் இந்த முறை 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் மதுபான விற்பனையை பெருக்குவதற்காக தமிழக அரசு நன்கு திட்டமிட்டே நடவடிக்கைகளை எடுத்தது. டாஸ்மாக் மண்டல அதிகாரிகளுக்கான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை எட்டத் தவறும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகவே வெறுமனே மதுபான விற்பனை என்பதை தாண்டி மிகவும் உக்கிரமாக மதுவை மக்கள் மத்தியில் ப்ரமோட் செய்ததுதான் ஜெயலலிதா அரசாங்கத்தின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் சாதனை. மற்றோர் சாதனைக்கும் ஜெயலலிதா சொந்தக்காரர்... அதாவது 2013 முதல் எலைட் மதுபான கடைகள் எனப்படும் உயர்ரக மதுபானங்களை மட்டும் விற்கும் கடைகளையும் மாநிலம் முழுவதும் துவக்கினார். 450 எலைட் மதுபான கடைகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் பல மாவட்டங்களில் எலைட் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது தவிர பொத்தானை அமுக்கினால் பீரை கொட்டும் மிஷன்களுக்கும், நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டே மதுபானங்களை அருந்தும் மினி விருந்தினர் ஓய்வு பார்களையும் கூட ஏற்படுத்த டாஸ்மாக் திட்டமிட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தவிர கடந்த 12 ஆண்டுகளில் ஆண்டுதோறும் டாஸ்மாக் வருவாய் 20 சதவிகிதம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதும் கூடுதலான உபரித் தகவல்.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி தமிழகத்தில் உள்ள ஆண்களில் 47 சதவிகிதம் பேர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது 2005-2006ம் ஆண்டில் இருந்ததை விட 5 சதவிகிதம் அதிகம் என்பது முக்கியமானது. குடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களில் குறைந்தது 10 சதவிகிதம் பேருக்கு அவர்கள் மதுபழக்கத்தை நிறுத்தும் போது தீவிர சிகிச்சை தேவை என்பதுதான், மறுவாழ்வு மையங்களில் பணியாற்றும் மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. குடிக்கும் பல லட்சம் ஆண்களுக்கு மதுவிலக்கு அமலாகும் போது ஏற்படும் சூழலின் போது கண்டிப்பாக தீவிர சிகிச்சை குறைந்தது ஒரு மாதகாலமாவது தேவைப்படும். இவ்வாறான மையங்களை ஏற்படுத்த சில ஆயிரம் ரூபாய் கோடியில் மாநிலம் முழுவதிலும் மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும்.

இது குறித்தெல்லாம் எந்த திட்ட அறிவிப்பும் அம்மாவிடமிருந்தும் இல்லை... ஐயாவிடமிருந்தும் இல்லை... உளவியல் நிபுணர்கள் மற்றும் அதாவது சைக்கியாடிரிஸ்டுகளின் பங்கும், உளவியல் ஆலோசகர்கள், அதாவது எம்பிபிஎஸ் படிக்காத சைக்காலஜிட்டுகளின் பங்கும் இதில் முக்கியமானது. தமிழகம் முழுவதும் சைக்கியாடிரிஸ்டுகள் 500 பேர்தான் இருக்கின்றனர். சைக்காலஜிஸ்டுகளின் எண்ணிக்கையும் சில நூறுக்கும் மேல் இல்லை. ஆகவே இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், போதிய முதலீடுகளை சுகாதார துறையில் செய்யாமல் மதுவிலக்கு என்றே பேசுவது அரசியல் கட்சிகளின் மற்றுமோர் மோசடி வித்தைதான்.

இவ்வாறு விரிவாக எழுதுவதற்கு காரணம் மதுவிலக்கு என்பது வெறும் பொருளாதார பிரச்சனையோ அதாவது அரசின் கஜானாவை நிரப்புவதற்கான பிரச்சனையோ மட்டுமல்ல, மாறாக அடிப்படையில் இது ஓரு ஆழமான மனித உளவியல் சம்மந்தப்பட்ட பிரச்சனை. உலக சுகாதார நிறுவனம் பூரண மதுவிலக்கை ஆதரவிக்கவில்லை. காரணம் தடை செய்யும் அணுகுமுறையால் மட்டும் இந்த விஷயத்தை நாம் சமாளிக்க முடியாது... மாறாக வேறு பல புதிய பிரச்சனைகளுக்கே இது வழி வகுக்கும் என்ற அறிவும் தான் காரணம்.... மதுவினால், அதிலும் குறிப்பாக பெருங்குடியால் வரும் தீமைகளை நன்கு உணர்ந்திருக்கும் எந்த வளர்ந்த நாடுகளும் சரி, உலக சுகாதார நிறுவனமும் சரி பூரண மதுவிலக்கை பிரச்சனைக்கான தீர்வாக ஒருபோதும் முன் வைப்பதில்லை. 1920-30களில் சுமார் பத்தாண்டு காலம் அமெரிக்காவில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு முற்றிலும் தோல்வியடைந்த பின்னர் உலகின் பல நாடுகளில் கடந்த ஒரு நூறாண்டில் மதுவிலக்கு பரிசோதிக்கப்பட்டு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது.

இந்தியாவில் குஜராத்தில் மட்டும்தான் பெயரளவில் இது நடைமுறையில் இருக்கிறது. குஜராத்தில் கூட ஒரு பகுதியில் மது அதிகாரபூர்வமாகவே தாராளமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுவிலக்கு இருக்கும் குஜராத்தில் கூட கள்ளச் சந்தையில் அமோகமாக இது கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகளை ஈர்க்க அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் மதுவிலக்கை தளர்த்துவது பற்றி அம் மாநில அரசு தற்போது தீவிரமாக யோசித்து வருகிறது. பிஹாரில் இப்போது தான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.. போகப் போகத் தான் இதன் லட்சணம் தெரியும். ஆந்திராவிலும், ஹரியாணாவிலும் அமல்படுத்தப்பட்ட மது விலக்கு சில ஆண்டுகளிலேயே முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. கேரளாவில் ஆண்டுக்கு பத்து சதவிகிதம் கடைகளை மூடி, 2014ல் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிவித்தார் காங்கிரஸ் முதலமைச்சர் ஓமண் சாண்டி. ஆனால் தற்போது அங்கு ஆட்சியை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடதுசாரி முன்னணி இப்போதே அறிவித்து விட்டது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பார்களை மூட மாட்டோம்... அதாவது மது விலக்குக் கொள்கை மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்படும் என்பதை மறைமுகமாக அறிவித்து விட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கர்நாடகாவில் மது விற்பனை கூடிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட முக்கியமாக புதுச்சேரியில் மது விற்பனை கனகச்சிதமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

இதுதான் தமிழகத்தின் அண்டை மாநிலங்களின் நிலைமை. சுற்றி கொழுந்து விட்டு எறியும் நெருப்பின் இடையை கற்பூரத்தை எறியாமல் பாதுகாப்பது எப்படி என்று மதுவிலக்குப் பற்றி பேசிய திமுக தலைவர் கருணாநிதி இப்போது மாறிப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது கற்பூர உதாரணம் தான் சத்தியம் செய்து சொல்ல வேண்டிய யதார்த்தம். ஆனால் இன்று கருணாநிதி மாற்றிப் பேசுகிறார். இது வழக்கம் போலவே தமிழினத் தலைவர் அடிக்கக் கூடிய பல்டிகளில் ஒன்றுதான் ..... ஜெயலலிதா ஒவ்வோர் தேர்தல் பிரச்சாரத்திலும் படிப்படியாக மதுவிலக்கு என்று பேசத் துவங்கிவிட்டார். படிப்படியாக என்றால் எப்படி செய்யப் போகிறார்...? எத்தனை மாதங்களில் அல்லது ஆண்டுகளில் மது விலக்கை தான் கொண்டு வரப் போகிறேன் என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் இல்லை.... அதாவது துல்லியமானதோர் செயற் திட்டம், ஆங்கிலத்தில் சொன்னால் புளு பிரிண்ட் என்பார்கள் அதெல்லாம் எதுவுமில்லை..... தான் சொன்னதையே கிளிப் பிள்ளை போல சொல்லிக் கொண்டிருக்கிறார் ஜெ..... இதே தான் கருணாநிதியின் கதையும். மதுவிலக்கை அமல்படுத்த தனி சட்டம் என்கிறார் அவர். தனி சட்டத்திற்கு முதலில் வரைவு சட்ட மசோதா அதாவது டிராஃப்ட் பில் வேண்டும். அதுபற்றி கருணாநிதியிடிருந்து எந்த வார்த்தையும் இல்லை. இவர்கள் இருவரும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு கட்டுவதற்கான எந்த செயற் திட்டத்தையும் முன் வைக்கவில்லை .....

டாஸ்மாக்கிற்கு மதுபானங்களை சப்ளை செய்ய தமிழ் நாட்டில் 18 மதுபான ஆலைகள் உள்ளன. இவற்றில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் டிஆர் பாலுவுக்குச் சொந்தமான ஆலைகளும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவையும் அவரது நெருங்கிய உறவினர்களையும் இயக்குநர்களாக கொண்ட மிடாஸ் நிறுவனமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சசிகலா போயஸ் தோட்டத்தை விட்டு ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டபோது இந்த மிடாஸ் நிறுவனத்தின் இடைக்கால இயக்குனராக இருந்தவர் பத்திரிக்கையாளர் சோ.

2011-2012 முதல் 2015 - 2016 வரையில் மிடாசிடமிருந்து டாஸ்மாக் செய்த கொள்முதல் 11,432 கோடி ரூபாய்க்கு என்று அரசின் அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இதே தொகைக்கு, சற்றே கூடுதலாகவோ அல்லது குறைந்தோ திமுக புள்ளிகள் நடத்தும் ஆலைகளிடமிருந்தும் கொள்முதல் நடைபெற்றிருக்கிறது.

இன்று ஜெயலலிதாவின் மதுவிலக்கு கொள்கை பற்றி செய்திகளை வெளியிடும் எந்தவோர் ஊடகமும் மிடாஸூக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 11,432 கோடி ரூபாய் சப்ளை ஆர்டர்கள் பற்றியும், அதற்கும் அதிமுக அரசின் மதுவிலக்கு கொள்கைக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் பேச மறுப்பதும், மெளனம் சாதிப்பதும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. இந்த கள்ள மெளனத்தை, ஊடக தர்மம் என்ற பெரிய வார்த்தைகளை போட்டுக் கூட நாம் அலச வேண்டியதில்லை.... எந்தளவுக்கு தொழில்முறை சார்ந்த கண்ணியம் அதாவது ஃப்ரோஃஷனலிசம் தமிழ்நாட்டு ஊடகத்தில் நிலவுகிறது என்பதை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த கள்ள மெளனம் ...

நாம் ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்து கட்டுரையில் சொன்னது போல மதுவிலக்கை அமல்படுத்துவது பெருத்த சிக்கலான விஷயம். கள்ள சாராயத்துடன் சேர்ந்து இன்ன பிற குற்றவியல் நடவடிக்கைகளும் பெருகிவிடும். மதுவிலக்கை அமல்படுத்துவதில் முதல் வளையத்தில் இருக்கும் போலீசார் தான் இதில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதீதமான மன உளைச்சலுக்கு போலீசார் ஆளாவார்கள். கள்ளச் சாராய சாவுகள் பெருகும். இவையெல்லாம் நாம் விடும் சாபங்கள் இல்லை.... நடைமுறை யதார்த்தங்கள்.... தான் விரும்பியதை ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களின் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒருவர் தருவித்து அனுபவிக்கும் காலகட்டம் தான் இது. போதை பொருட்களை தடுப்பதில் காட்டும் கவனத்தை மதுவிலக்கில் சத்தியமாக காவல்துறை காட்டாது ....

அதீதமான நடைமுறைச் சிக்கல்கள் கொண்ட, இன்றைய நவீன உலகின் வாழ்வு முறைக்கு கிஞ்சித்தும் ஒத்து வராத ஒன்றை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக நம்முடைய அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அள்ளிவீசி விட்டுக் கொண்டிருக்கின்றனர். தெரிந்தே பச்சைப் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய உடனடித் தேவை... மதுக் கடைகளின் எண்ணிக்கையையும், அவற்றின் வேலை நேரத்தையும் கணிசமாக குறைப்பது ... விற்பனை இலக்கு வைத்து டாஸ்மாக் செயற்படுவதை அறவே ஒழிப்பது.... புதிய கடைகளை திறப்பதை நிறுத்துவது.... குறிப்பாகச் சொன்னால் அரசாங்கமே மதுவை புரமோட் செய்வதை முற்றிலுமாக தடுப்பது போன்றவைதான்.

பூரண மதுவிலக்கு என்பது ஒரு மாயமான் வேட்டை .... இந்த வேட்டையை தெரிந்தே ஆடும் நம்முடைய அரசியல்வாதிகளை அடையாளங் கண்டு கொள்வோம்.....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+