IPL ஃபீவர்.. சட்டசபையா? ஸ்டேடியமா? பேக் to பேக் சிக்ஸர்.. பவுன்சர்களை பவுண்டரிக்கு விரட்டிய உதயநிதி!
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் நிலையில், இது சட்டசபையா? கிரிக்கெட் ஸ்டேடியமா என சந்தேகப்படும் அளவுக்கு கிரிக்கெட், கோச், ரெஃப்ரி, சிக்ஸர், கேப்டன், சி.எஸ்.கே, ஐபிஎல் டிக்கெட் என்ற வார்த்தைகளே அதிகமாக ஒலித்துள்ளன.
ஆன்லைன் ரம்மி சட்டம், நிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து என்று இரண்டு சிக்சர்களை அடித்து அணியின் கேப்டனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை தொடர்பாக எதிர்க்கட்சியினர் வீசிய பவுன்சர்களை அநாயசமாக பவுண்டரிக்கு அனுப்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை மானியக்கோரிக்கை இன்று நடைபெற்ற நிலையில், விளையாட்டு போட்டிகளின் நுணுக்கங்களை தெரிவித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மானியக்கோரிக்கை மீதான பதிலுரையை தொடங்கினார்.

மாமன்றத்தின் நியாயமான ரெப்ரியாக சபாநாயகர் அப்பாவு செயல்படுவதாகவும், யார் யாரோ தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைத்து அதற்கான முயற்சி செய்வதாகவும், ஆனால் அவர்களின் விளையாட்டு இந்திய ஒன்றியத்தின் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழ்நாட்டில் என்றுமே எடுபடாது. வடக்கில் இருந்து வந்த யாரும் இங்கு வென்றது இல்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதற்கு காரணம் திமுக என்ற வலுவான அணியும் ஸ்டாலின் என்ற கேப்டன் இருப்பதும் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, பெரியார், அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோர் எங்கள் அணிக்கு கிடைத்துள்ள ஒப்பற்ற பயிற்சியாளர்கள் என்றார்.
எந்த நேரத்தில் யாருடன் மோத வேண்டும் என பெரியார் சொல்லிக்கொடுத்து இருப்பதாகவும், ஒற்றுமையுடன் கடமை, கட்டுப்பாடு, கண்ணியத்தோடு எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா சொல்லிக் கொடுத்துள்ளதாவும், எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அடிக்கக்கூடாது என்று கலைஞர் சொல்லிக் கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

மேலும், எப்போதெல்லாம் டிஃபன்ஸ் ஆட வேண்டும், எப்போதெல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லிக் கொடுத்துள்ளார் என்றும் ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு நேற்று ஒரு சிக்ஸரை அடித்த முதலமைச்சர், டெல்டா நிலக்கரி சுரங்கத்தை தடுத்து இன்னொரு சிக்ஸரையும் விளாசியுள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. எஎனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டது. தற்போதும் 300 முதல் 400 பாஸ்கள் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை.
எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "4 வருசமா சேப்பாக்கத்துல ஐ.பி.எல் போட்டியே நடக்கல, யாருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தீங்கனு தெரியல.. ஐபிஎல்லை நடத்துவது உங்களுக்கு மிகவும் நெருக்கமான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான், அவரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி கொடுங்க" எனக் கூற, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாய்விட்டுச் சிரித்தனர்.












Click it and Unblock the Notifications