கேரள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கும் வெற்றி... புதிய சகாப்தம்: ஜெ. மகிழ்ச்சி
சென்னை: கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றிருப்பது அதிமுக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுகவும் சில இடங்களில் போட்டியிட்டது. இவர்களில் இடுக்கி மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களான பிரவீணா, உஷா, பாலகிருஷ்ணன் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹெலன்மேரி, ஸ்ரீரஞ்சனி, சரஸ்வதி ஆகிய 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று சூட்டிய பெயருக்கு கூடுதல் பெருமையைத் தேடித்தரும் விதமாக, அண்டை மாநிலங்கள் தொடங்கி அந்தமான் பிரதேசம் வரை அடுக்கடுக்கான வெற்றிகளை அதிமுக குவித்து வருவது கண்டு நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 20-9-2015 அன்று அந்தமான் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் கடந்த 2-11-2015, 5-11-2015 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான, பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டு எஸ்.ஹெலன் அமலோற்பவமேரி, 7-வது வார்டு ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டு எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டு பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 3-வது வார்டு எல்.பாலகிருஷ்ணன், பீர்மேடு பஞ்சாயத்து 1-வது வார்டு எஸ்.பிரவீணா ஆகிய 6 பேர் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர். அதிலும், 5 மகளிர் வெற்றி பெற்றுள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது.
இந்த உன்னத பெருமைக்கு அடித்தளமாக, பெருவாரியான வாக்குகளை அதிமுக வேட்பாளர்களுக்கு வழங்கி மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக வரலாற்றில், கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மேலும் ஒரு புதிய சகாப்தம்; இனி அதிமுக பெறப் போகும் வெற்றிகளுக்கு அச்சாரமாகவே அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றிக்காகப் பாடுபட்ட கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவருடன் தேர்தல் பணியாற்றிய கேரள மாநிலக் கழகச் செயலாளர் ஸ்ரீனிவாசன் வேணுகோபாலுக்கும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெற்றி, அதிமுக தொண்டர்களுக்கு தித்திப்பான தீபாவளி இனிப்பாக மலர்ந்திருப்பதை எண்ணி, நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications