ஆக்ஷன் 3! கரூரில் சல்லடை போடும் ஐடி அதிகாரிகள்! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானோர் வீடுகளில் ரெய்டு!
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கொங்கு மெஸ் மணி வீடு, ரமேஷ் பாபு அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் 3வது கட்டமாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் மணி வீடு, ஹோட்டல் உள்பட கரூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த மே மாதம் 26ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் ஓனர் மணி என்னும் சுப்பிரமணி, பால விநாயகர் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் தங்கராஜ், காளியம்பாளையம் பெரியசாமி உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை சோதனையின் போது இவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.
இதனால் இவர்கள் தொடர்புடைய இடங்களில் ஆரம்பத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் நேரில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகாததால் சீல் வைக்கப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் பாதுகாப்போடு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.
அந்தவகையில் கரூர்-கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 15க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
ராயனூர், கொங்கு அவன்யூ பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஜூன் 23ஆம் தேதியும் கொங்கு மெஸ் சுப்பிரமணி உள்ளிட்டோரின் வீடுகளில் சீலை அகற்றி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கரூரில் கொங்கு மெஸ் மணி வீட்டில் 3வது கட்டமாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மே 26 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில், கொங்கு மெஸ் மணி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
கரூரில் செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த ரமேஷ், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் உதவியாளர் சண்முகம், கொங்கு மெஸ் மணி, பைனான்சியர் கணேஷ் முருகன், கல்குவாரி நடத்திவரும் பாலவிநாயகம் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்ன ஆண்டாங்கோவில் பாரி நகரில் உள்ள ராம விலாஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிபன் கேபிடல்ஸ் என்னும் நிதி நிறுவனத்திலும், கோவை சாலையில் உள்ள குறிஞ்சி பைனான்ஸ் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிவிட்டு சோதனை நடத்தினர். செங்குந்தபுரம் மூன்றாவது கிராஸ் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் இன்று 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த முறை நடைபெற்ற சோதனையின் போது சீல் வைத்து சென்ற இடங்கள் மற்றும் புதிதாக ஒரு சில இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications