ஜல்லிக்கட்டு நடத்த நம்மைவிட ஜவடேக்கருக்குத்தான் அதிக ஆர்வம்: டெல்லி ரிட்டர்ன் பொன்னார்
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் ஆர்வமாக இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசின் அவசர சட்டம் அல்லது சட்ட திருத்தம் தேவைப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரிடம் அதை வலியுறுத்துவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுவினர் டெல்லி சென்றிருந்தனர்.

அக்குழு இன்று சென்னை திரும்பியது. விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஜவடேக்கரை இருமுறை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடைபெறுவதன் அவசியம் குறித்து கலந்து பேசினோம். 1 மணி நேரம்வரை விவாதித்திருப்போம்.
உண்மையை சொல்ல வேண்டுமானால், நம்மைவிட ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஜவடேக்கர்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். அவரது பேச்சில் இருந்து இது தெரியவந்தது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனிடையே வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஜல்லிக்கட்டு விவகாரத்தில், அதிமுக, திமுக இரண்டும், குறைசொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளன. இருவரும் குறை சொல்வதைவிட்டுவிட்டு ஒற்றுமையாக பாடுபட வேண்டும்.
தடைகளை தாண்டி எப்படியும் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்ற நம்பிக்கையுள்ளது என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
