ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தஞ்சை, சிவகங்கையில் த.வா.க.வினர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்
தஞ்சாவூர்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிவகங்கை மற்றும் தஞ்சாவூரில் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.
தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பழமையான விளையாட்டான "ஏறு தழுவுதல்" என்னும் ஜல்லிக்கட்டு வருடம் தோறும் நடைபெறும். இந்நிலையில் இந்த போட்டியை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள பள்ளிஅக்ரஹாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 பேர் செல்போன் டவர்களில் ஏறி நின்று இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 செல்போன் கோபுரங்களில் ஏறி நின்று போராட்டம் நடத்திய இளந்தளிர், பாக்கியராஜ் ஆகியோரை செல்போன் டவர்களில் இருந்து இறங்கச் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அதே போன்று, சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று காலை போராட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முருகானந்தம், காளீஸ்வரன் மற்றும் தமிழர் படை மாவட்ட செயலாளர் பாலா ஆகியோர் செல்போன் டவரில் ஏற அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் தரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று தருவதாக உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் செல்போன் டவரில் ஏறிய 3 பேரும் கீழே இறங்கி வந்தனர். அவர்களோடு அந்த கட்சியை சேர்ந்த சரவணன், மணிகண்டன், அறிவுமலை, கதிரவன், உலகநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் ரவுண்டானா ரோடு சந்திப்பில் உள்ள செல்போன் டவரில் ஏறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கச் செய்தனர். அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications