ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தை அமல்படுத்த சொல்வதா?- சுப்பிரமணியன் சுவாமிக்கு மமக கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணத்தால் தென் தமிழகம் மற்றும் சென்னையில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் காலவரையற்ற சிகிச்சை பெற்று வருவதால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தி தமிழக சட்டமன்றத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள கருத்துகளை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

Jawahirullah has Condemned to bjp senior leader subramaniyan swamy

சுப்ரமணியன் சுவாமி தனது அறிக்கையில் தமிழகத்தில் நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் துயில் பிரிவுகள் (ஸ்லீப்பர் செல்) செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு "ஆதரவும் ஒத்தாசையும் அளிக்கும் நிலைப்பாட்டை திராவிடர் கழகமும் மிச்சமுள்ள விடுதலைப்புலிகள் மற்றும் தலைமறைவு நக்சலைட்டுகளும் எடுத்துள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில் தமிழகத்தில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 356-ஐ அமல்படுத்தி (குடியரசுத் தலைவர் ஆட்சி) சட்டப்பேரவையை முடக்கி வைக்க வேண்டும். மேலும் தெற்கு மாவட்டங்களிலும் சென்னையிலும் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை 6 மாதங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சுப்ரமணியன் சுவாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் உடல்நிலையை காரணம் காட்டி தமிழகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 356ம் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது வரை தமிழக சட்டமன்றம் முடக்கப்பட வேண்டும் என்ற சுப்ரமணியன் சுவாமியின் கருத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. இத்துடன் கூடவே தென்மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் துயில் பிரிவுகள் செயல்படுகின்றன என்றும் அதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவும் ஒத்தாசையும் வழங்குகின்றன என்று அபாண்டமான குற்றச்சாட்டை சுவாமி சுமத்தியிருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமல்லாது திராவிடர் கழகம், பெரியாரிய அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மீது சுப்ரமணியன் சுவாமியின் நெஞ்சத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள வஞ்சகத்தை அவரது அறிக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. காஷ்மீர் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ள ஆயுத படைகள் சிறப்பு பாதுகாப்புச் சட்டத்தை (AFSPA) தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சுப்ரமணியன் சுவாமியின் வேண்டுகோள் தமிழக மக்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்புணர்வின் வெளிப்பாடாக இருக்கின்றது. தமிழகத்தில் நேரடி தேர்தல் களத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெற முடியாத பா.ஜ.க. கொல்லைப்புற வழியாக தமிழகத்தில் அதிகாரத்தை பெறுவதற்கு துடியாய் துடிக்கின்றது.

இதற்காக தமிழக முதலமைச்சரின் சுகவீனத்தை பயன்படுத்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வாயிலாக தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்யும் தனது வெறியுணர்வை வெளிப்படுத்தியுள்ளது. அஇஅதிமுக ஆட்சியின் மீது எங்களுக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் தமிழக முதலமைச்சரின் சுகவீனத்தை பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை பிரகனப்படுத்தி தமிழக சட்டமன்றத்தை முடக்கிவைக்க திட்டமிடுவது ஒரு பட்டவர்த்தனமான ஜனநாயக படுகொலையாகும்.

பா.ஜ.க.வின் மாநிலங்களவை உறுப்பினரின் ஜனநாயக படுகொலைத் திட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழக மக்கள் பாஜகவின் இந்த ஜனநாயகப் படுகொலைத் திட்டத்தை ஒன்று திரண்டு நின்று முறியடிக்க வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+