ஜெ. பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார், நாக்கு கூச வேண்டாமா?: ராமதாஸ்
சென்னை: ஒரு மாநிலம் அதன் மின்தேவையில் மூன்றில் இரு பங்கை மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கும் நிலையில், அம்மாநிலத்தை மின்மிகை மாநிலம் என்றால் கேட்பவர்கள் நகைப்பார்கள் என்பதைக் கூட உணராமல் ஜெயலலிதா பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆட்சியில் இருந்த போது செய்ததை சொல்லி வாக்கு கேட்பது தான் ஆட்சியாளர்களுக்கு அழகு. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையும் செய்யாததாலோ என்னவோ, இல்லாததை சொல்லி வீண் விளமபரம் தேடிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் அளவுக்கு கூட புதிய மின்திட்டங்கள் செயல்படுத்தப்படாத நிலையில், 7485 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கோவை கூட்டத்தில் அவர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அடுத்த 3 மாதங்களில் மின் வெட்டைப் போக்கி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவதாக அறிவித்தார். ஆனால், பல 3 மாதங்களாகியும் மின்வெட்டு அதிகரித்ததே தவிர குறையவில்லை. 2011 ஆம் ஆண்டு புதிய அரசு பதவியேற்ற மே மாதம் முதல் நாளில் தமிழகத்தின் மொத்த மின் தேவை 12,000 மெகாவாட்டாகவும், மின் உற்பத்தி 8000 மெகாவாட்டாகவும் இருந்தது. இதில் தமிழ்நாடு மின்வாரியம் அதன் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் நேரடியாக உற்பத்தி செய்தது வெறும் 2883 மெகாவாட் மட்டுமே.
அதிலும் கூட அனல் மின் நிலையங்களில் இருந்து கிடைத்த மின்சாரம் 2050 மெகாவாட் மட்டும் தான். மத்திய மின்சாரத் தொகுப்பிலிருந்து 2225 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. இவை தவிர தனியாரிடமிருந்து 2800 முதல் 3200 மெகாவாட் வரை மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. அன்றைய நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டதை விட இரு மடங்கு மின்சாரம் வெளியிலிருந்து வாங்கப்பட்டது.
அப்போதும் 4000 மெகாவாட் பற்றாக்குறை இருந்ததால் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டது.
இன்றைய (02.05.2016) நிலையில் தமிழகத்தின் மொத்த மின் தேவை சுமார் 15,500 மெகாவாட் ஆகும். மொத்த மின் உற்பத்தி 14,500 மெகாவாட்டாக உள்ளது. ஆனால், இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 4713 மெகாவாட் மட்டுமே. மத்தியத் தொகுப்பிலிருந்தும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்தும் 4442 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. மீதமுள்ள 5426 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது.
இதில் 498 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.15.14 என்ற அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஒரு மாநிலம் அதன் மின்தேவையில் மூன்றில் இரு பங்கை மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கும் நிலையில், அம்மாநிலத்தை மின்மிகை மாநிலம் என்றால் கேட்பவர்கள் நகைப்பார்கள் என்பதைக் கூட உணராமல் ஜெயலலிதா பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்றால், அந்த அளவுக்கு மக்களை முட்டாள்களாக நினைக்கிறார் என்று தான் பொருள்.
ஜெயலலிதா கூறுவதைப் போலவே ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தமிழகத்திற்கு இப்போது 7485 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், அதில் 1800 மெகாவாட் மின்சாரம் முந்தைய ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மேட்டூர் மற்றும் வடசென்னை மின்நிலையங்களில் இருந்து கிடைக்கிறது.
அதுமட்டுமின்றி, தேசிய அனல் மின் கழகம் கூட்டு முயற்சியில் அமைத்த வல்லூர் மின்திட்டத்தின் 3 அலகுகளில் இருந்து 1050 மெகாவாட், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இருந்து 563 மெகாவாட், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தூத்துக்குடியில் கூட்டு முயற்சியில் அமைத்த மின் நிலையத்திலிருந்து 439 மெகாவாட், 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்களில் இருந்து 98 மெகாவாட், நெய்வேலி மற்றும் மத்திய அரசின் திட்டங்களிலிருந்து தமிழகத்தின் பங்காக 470 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. இவை தவிர தனியாரிடமிருந்து 3065 மெகாவாட் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுகிறது. இதில் ஒரு மெகாவாட் கூட ஜெயலலிதா அரசால் திட்டம் தீட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட, மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படவில்லை.
அவ்வாறு இருக்கும் போது 7485 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதை, அதிலும் 5585 மெகாவாட் தனியாரிடமிருந்தும், மத்திய தொகுப்பிலிருந்தும் கிடைக்கும் நிலையில் அதையெல்லாம் தமது அரசின் சாதனை என்று ஜெயலலிதா எப்படி கூற முடியும்? இப்படி சொல்வதற்கு நாக்கு கூச வேண்டாமா? அதிமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்திட்டமாவது தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதை ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா? எந்த மின் திட்டத்தையும் செயல்படுத்த முடியாதவர்கள் இப்படித்தான் செய்வார்கள் எனும் போது ஜெயலலிதாவும் அப்படி நடந்து கொண்டதில் வியப்பில்லை.
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்திருந்தால் கடந்த 5 ஆண்டுகளில் சாதித்திருக்க முடியும். ஆனால், எண்ணூரில் 660 மெகாவாட் திறன் கொண்ட ஒரே ஒரு மின்திட்டத்தை செயல்படுத்த மட்டுமே ஜெயலலிதா அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது. எண்ணூரில் 1320 மெகாவாட் திறன் கொண்ட சிறப்பு பொருளாதாரத் திட்ட அனல் மின்நிலையம், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் மாற்று அனல் மின்நிலையம், 800 மெகாவாட் வடசென்னை அனல் மின் நிலையம், 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின்நிலையம், உடன்குடியில் தலா 1320 மெகாவாட் என மொத்தம் 4960 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் நிலையங்கள், செய்யூர் மற்றும் கடலாடியில் தலா 4,000 மெகாவாட் என மொத்தம் 8000 மெகாவாட் திறன் கொண்ட 2 அதி உயர் அனல் மின் திட்டங்கள் என மொத்தம் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல திட்டங்கள் முந்தைய ஆட்சியிலேயே கிடப்பில் போடப்பட்டவை.
ஜெயலலிதா நினைத்திருந்தால் கடலாடி மின் திட்டம் தவிர மீதமுள்ள சுமார் 14,000 மெகாவாட் திறன் கொண்ட மின்திட்டங்களை செயல்படுத்தி மின் உற்பத்தியை அதிகரித்திருக்கலாம். அப்போது தமிழ்நாடு உண்மையாகவே மின்மிகை மாநிலமாக மாற்றியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அதற்கு காரணம் மின்திட்டங்களை செயல்படுத்துவதை விட தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று திமுகவும், அதிமுகவும் கருதுவது தான். தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி, முந்தைய திமுக ஆட்சியில் ரூ.20,000 கோடி என மொத்தம் ரூ.42,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த பணத்தைக் கொண்டே கிட்டத்தட்ட 8000 மெகாவாட் மின்திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஊழல் செய்து பணம் சேர்ப்பதற்காக தமிழக மின்சார வாரியத்தையும், மின்சார நிலைமையையும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் திட்டமிட்டு சீரழித்தன.
தமிழகத்தில் 7506 மெகாவாட் அளவுக்கு காற்றாலை மின்னுற்பத்திக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மே மாதம் மத்தியிலிருந்து செப்டம்பர் இறுதி வரை காற்றாலைகளில் இருந்து தடையற்ற மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மின்சாரம் யூனிட் ரூ.3 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் இதை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், இதை கொள்முதல் செய்வதால் தங்களுக்கு லாபம் இல்லை என்பதால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 25 விழுக்காட்டைக் கூட, அதாவது 1500 முதல் 1800 மெகாவாட் கூட கொள்முதல் செய்யப்படுவதில்லை. மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் தமிழக அரசு அனுமதிப்ப தில்லை. இதனால் தென் மாவட்டங்களில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளவர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு தமிழகத்தின் மின்சார சூழலை திட்டமிட்டு சீரழித்த ஜெயலலிதாவுக்கும், கலைஞருக்கும் மின்திட்டங்கள் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. தங்களின் சுயலாபம் மற்றும் பண வெறிக்காக தமிழகத்தை இருளில் தள்ளிய திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மே 16ம் தேதி மக்கள் பாடம் புகட்டுவர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications