அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஐவரணி பெயர் இருக்கா?
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் தேர்வில் உள்ள சில குளறுபடிகளால் ரீலீஸ் தேதி தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ் உள்ளிட்ட ஐவரணியினரின் பெயர் இடம்பெறுமா என்பதே இப்போது கேள்விக்குறியாக உள்ளது.
ஜெயலலிதா தனது 2ம் நம்பர் ராசி சென்டிமெண்ட் படி இன்றைய தினம் தேர்தல் அறிக்கையையாவது ஜெயலலிதா வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல இன்றைய தினம் எதுவுமே வெளியாகவில்லை. அதற்கும் சில காரணங்களை அதிமுகவினர் கூறுகின்றனர்.

எதிரிகளை களத்திலேயே காணோம் என்று கூறிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவித்த பின்னர் அதிரடியாக 5 பேரிடம் மட்டுமே நேர்காணல் நடத்தி அதை பற்றியே பேச வைத்தார். எதிர்முகாமில் இருப்பவர்களின் ஆக்சனுக்கு ஏற்ப ரியாக்சன் காட்டுவது ஜெயலலிதாவின் வழக்கம்.
தேர்தலில் தனித்து போட்டி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில் 234 என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் செய்து வரும் அதிமுகவும் தனித்து களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எழுந்துள்ளது.
எப்படியோ ஒருவழியாக திமுக பக்கம் விஜயகாந்தை போகவிடமால் செய்தாயிற்று அடுத்தது 234 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளது என்கிறது போயஸ்கார்டன் வட்டாரம்.
அதிமுகவை நம்பியுள்ள சிறு சிறு கட்சிகளையும் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட வைக்க முடிவு செய்திருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆளுக்கு இரண்டு சீட் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா போடி தொகுதியில் போட்டியிடப்போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் அந்த தொகுதியில் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை ஓபிஎஸ் அதிகார மையத்தை ஓரங்கட்ட சசிகலாவோ, அல்லது டிடிவி தினகரனையோ தென் மாவட்டத்தில் போட்டியிட வைக்கப் போவதாகவும் அதிமுக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதிமுகவில் கோலோச்சிய ஐவரணி இப்போது ஆட்டம் கண்டுள்ளது. ஆதரவாளர்கள் மட்டுமல்லாது ஐவரணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய ஐவரும் கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்டில் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக மகளிரணி மாநாடு தொடங்கி நேர்காணல் வரைக்கும் எதற்குமே 'ஓபிஎஸ் அன் கோ' தள்ளியே வைத்திருக்கிறார் ஜெயலலிதா என்கின்றனர். இப்படியே போனால் வேட்பாளர் லிஸ்டிலாவது இவர்கள் ஐவரின் பெயர் இடம்பெறுமா என்பதே இன்றைக்கு அதிமுகவினர் எழுப்பும் கேள்வியாக உள்ளது. இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்தால் மட்டுமே வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவார் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications