நெருங்கும் மே 23... இடைத்தேர்தலா? முன்கூட்டியே சட்டசபை தேர்தலா?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதில் தாமதமாவது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டே இருப்பதால், அவர் 6 மாத காலம் முதல்வராக இருந்துவிட்டு, சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பாரா அல்லது, ஏதேனும் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா என்பது குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.

ஒரு மாநில அரசின் பதவிக் காலம் என்பது முதலாவது சட்டசபை கூட்டப்பட்ட நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி தற்போதைய அண்ணா தி.மு.க. அரசின் ஆட்சிக் காலம் வரும் மே 23-ந் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பொதுவாக ஒரு ஆட்சிக் காலத்தின் கடைசி ஓராண்டில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையத்தை மாநில அரசுகள் நிர்பந்திக்க முடியாது.
ஆனால் 4ஆவது ஆண்டு நிறைவடைவதற்கு முன்பே அதாவது மே 23-ந் தேதிக்கு முன்பே ஏதேனும் ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தால், அந்த தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துமாறு மாநில அரசு தேர்தல் ஆணையத்தை நிர்பந்திக்க முடியும். இதனால் இடைத்தேர்தலை நடத்த வேண்டிய நிலை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.
இந்த பின்னணியில் வரும் மே 23-ந் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா அல்லது 6 மாதத்தில் சட்டசபை கலைக்கப்படுமா என்பது குறித்து தெளிவாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
