ஜெயலலிதாவின் கடைசி கைரேகையும்... கையெழுத்தும்... மறக்கமுடியாத நவம்பர் 2016
ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக கடைசியாக கைரேகையும், கையெழுத்தும் போட்டது இந்த நவம்பர் மாதத்தில்தான்.
சென்னை: அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடைசியாக கையெழுத்து போட்ட அறிக்கை வெளியான நாள் நவம்பர் 22. அதன்பின்னர் ஜெயலலிதாவின் கைரேகையோ, கையெழுத்தோ வேறு யாருக்குமே தேவைப்படாமல் போய்விட்டது.
வேதா நிலையத்திலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் மகாராணியாக வலம் வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எல்லாம் கடந்த ஆண்டு செப்டம்பர் 22 வரைதான். அதன்பின்னர் நடந்த சம்பவங்களை நாடறியும்.
காய்ச்சல்தான் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் கூறின. நாட்கள் கடந்தன. அவர் முகம் பார்க்க அப்பல்லோ வாசலில் மக்கள் கூட்டம் கூடியது.

கிரிட்டிக்கல் கேர் யூனிட்
அப்பல்லோ மருத்துவமனையில் கிரிட்டிக்கல் கேர் யூனிட் பகுதியில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தனர். ஆனாலும் ஜெயலலிதாவிற்கு என்ன நடக்கிறது என்பதை அதிமுக தொண்டர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

டாக்டர்களின் நம்பிக்கை
ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் மாறி மாறி நம்பிக்கை அளித்தனர். ஆனால் ஜெயலலிதா நலமாக இருந்த காட்சியை ஒருமுறை கூட வெளியிடவில்லை. ஆனாலும் மக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

ஜெயலலிதாவின் கைரேகை
திருச்சி, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பி-பார்ம்மில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துப்போட வேண்டும். ஆனால், அதில் ஜெயலலிதா கைநாட்டு வைத்திருந்தார். அதுதான் அவர் வாழ்நாளில் முதலும் கடைசியுமாக வைத்த கைரேகையாக இருந்திருக்கும்.

பேசிய ஜெயலலிதா
ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் அறையில் இருந்தபடி டிவியில் செய்தி சேனல்களை நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் என்றும், மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் இயல்பாக பேசி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

கடிதம் எழுதிய ஜெயலலிதா
இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதியன்று ஜெயலலிதா தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். மக்களின் வேண்டுதலின் பலனால் மறுபிறவி எடுத்துள்ளேன். நான் குணமடைந்து வருகிறேன். விரைவில் பணிக்கு திரும்புவேன் என்று ஜெயலலிதா எழுதிய கடிதத்தினால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

ஜெயலலிதா இயல்பு நிலை
கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், இயல்பாக சுவாசிக்கிறார் என்றும் அப்பல்லோ டாக்டர் பிரதாப் ரெட்டி கூறினார். அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் பேட்டி அளித்து தொண்டர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தினார்.

ஜெயலலிதா கடைசி அறிக்கை
இதனையடுத்து நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி தெரிவித்து நவம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியானது. அதில் இருந்த கையெழுத்துத்தான் அதிகாரபூர்வ ஜெயலலிதாவின் கடைசி கையெழுத்து.

சடலமாக திரும்பிய ஜெயலலிதா
பணிக்கு திரும்ப காத்திருக்கிறேன் என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்திய ஜெயலலிதா கடைசியில் டிசம்பர் 6ஆம் தேதி சடலமாகவே திரும்பினார். அவரது வருகையை நினைத்து அப்பல்லோ மருத்துவமனை வாசலில் காத்திருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இப்போது நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது அந்த 75 நாட்களும் ஜெயலலிதாவை வைத்து மிகப்பெரிய நாடகத்தை நடத்தியிருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications