முதல்வராக.. கருணாநிதியின் சாதனையை சமன் செய்யும் ஜெயலலிதா!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 7 மாதங்களுக்கு பிறகு தமிழக முதல்வராக நாளை மீண்டும் பதவியேற்க உள்ளார். இதன் மூலம் அதிக முறை முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ள கருணாநிதியின் சாதனையை அவர் சமன் செய்கிறார்.
ஜெயலலிதா 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மேல்கோட்டையில், ஜெயராம் - சந்தியா தம்பதிக்கு மகளாக பிறந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார்.

சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் முடித்தார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
பிரபல தமிழ் சினிமா நடிகையாக விளங்கிய ஜெயலலிதா, 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார். 1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். எம். ஜி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
1986 ல் முதல்முறையாக போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ல் பர்கூர் தொகுதியில் வெற்றி கண்டார். தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் பதவி வகித்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ரூ.66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 2014 செப்டம்பர் 27ல் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் 2015 மே 11ம் கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுவித்தது.
முன்னதாக, 1996 தேர்தலில் பர்கூரில் தோல்வியடைந்தார். 2002ல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006 பொதுத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது சென்னை ஆர்.கே.நகரில் இருந்து போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
மீண்டும் நாளை 5வது முறையாக முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா, தமிழகத்தில் அதிகமுறை முதல்வராக பதவி வகித்தவர் என்று கருணாநிதி படைத்த சாதனையை சமன் செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications