ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்... அப்பல்லோ அறிக்கை வெளியிட்ட நாள் இன்று
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாசத்தில் இருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதன்முறையாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. செப்டம்பர் 23, 24ஆம் தேதிகளில் அப்பல்லோ அனுப்பிய ஊடகக் குறிப்புகளில் முதல்வர் வழக்கமாக உண்ணும் உணவுகளை உட்கொள்கிறார் என்று கூறப்பட்டது.
02-10-2016 என்று வெளியிட்ட அறிக்கையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலின் கண்காணிப்பில் முதல்வர் இருப்பதாக அறிக்கை கூறியது. ஜெயலலிதாவிற்கு நோய் தொற்று சிகிச்சை, அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மறுநாளே அதாவது அக்டோபர் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
|
அக்டோபார் 3ல் அப்பல்லோ அறிக்கை
03-10-2016 ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தொடர் சிகிச்சையால் முதல்வர் குணமடைந்து வருகிறார்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் ஜெ.,
கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என அப்போலோ நிர்வாகம் கூறியிருந்தது.

ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்
அப்பல்லோ அறிக்கையில், உடலுக்கு தேவையான சுவாச உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதாவது, வென்டிலேட்டர் போன்ற உபகரணங்களை கொண்டு செயற்கை சுவாச உதவி வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அபாய கட்டத்தில் ஜெ.,
ஜெயலலிதாவிற்கு ஆரம்பம் முதலே மூச்சுத்திணறல் இருந்துள்ளது. நுரையீரல் தொற்றுக்காக கொடுக்கப்பட்ட மருந்துகள் ஓரளவு பலனளித்தநிலையில், மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்றார் ஜெயலலிதா. மூச்சுத்திணறலுக்காக அவ்வப்போது செயற்கை சுவாசம் அளித்தனர் மருத்துவர்கள்.

மரணமடைந்த ஜெயலலிதா
ஜெயலலிதா வெண்டிலேட்டரில் இருக்கிறார் என்பது தவறான தகவல். இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். அவருக்கு மூச்சுவிட சிரமங்கள் இருக்கும் நேரத்தில் மட்டும் செயற்கை சுவாசத்தை தேவையான அளவு கொடுக்கிறார்கள் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தன. ஆனால் ஜெயலலிதா பற்றி பரவிய வதந்திகள் கடைசியில் உண்மையாகி விட்டன. காய்ச்சல் என்று அப்பல்லோவிற்கு சென்ற ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் சடலமாகவே வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications