மவுன விரதம் கடைப்பிடித்த ஜெயலலிதா கொதித்தெழ காரணம்... ‘உள்நோக்கம்’ தான்: கருணாநிதி
சென்னை: இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்த ஜெயலலிதாவை விவசாயிகள் சீக்கிரம் மறக்கமாட்டார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
பதவி பறி போன நாளிலிருந்து வாய் திறக்காமல் மவுன விரதம் கடை பிடித்து வந்த ஜெயலலிதா, தற்போது கொதித்தெழுந்து அறிக்கை மேல் அறிக்கைவிடக் காரணமே, நான் என்னுடைய அறிக்கையில், ''அ.தி.மு.க. தற்போது இந்த மசோதாவை ஆதரிக்க ஏதோ உள்நோக்கம் தான் காரணம்" என்று சொன்னது தான்.
எப்படிப்பட்ட பித்தலாட்டம் ?
உதாரணத்திற்கு அ.திமு.க. ஆட்சியில் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்காக சுமார் 200 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லையா? இதுபோல எத்தனை தனியார் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதையெல்லாம் மறைத்துவிட்டு, ஜெயலலிதா தனியார் நிறுவனங்களுக்காக தமிழகத்தில் நிலங்கள் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் நில எடுப்பு செய்யக்கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் மத்திய பா.ஜ.க. அரசிடம் கடும் நிபந்தனை வைத்ததாகவும், அதனை அவர்கள் வரவேற்று ஏற்றுக் கொண்டதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இதுவரை தமிழகத்தில் எந்த ஆட்சி காலத்திலாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ நில எடுப்பு சட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டது உண்டா? அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டிலேயே இல்லாதபோது, அதை ஒரு நிபந்தனையாக ஜெயலலிதா வைத்ததாகவும், அதனை பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டதாகவும் கூறுவது எப்படிப்பட்ட பித்தலாட்டம்?.

ஜெயலலிதாவை விவசாயிகள் மறந்து விடுவார்களா...?
ஜெயலலிதா தனது அறிக்கையில் "தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா 5 வகை திட்டங்களுக்கு சில விதிவிலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது" என்றும், மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்த சட்டத்தை எதற்காக எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

5 வகைத் திட்டங்களுக்கு...
ஆனால் அந்த 5 வகை திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யும்போது சமூக தாக்கம் பற்றிய மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதில் இருந்தும், நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதில் இருந்தும் விலக்களிக்க மாநில அரசு கருதி பார்க்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தாலும், அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன் திட்டத்திற்கு தேவையான குறைந்தபட்ச நிலம் எவ்வளவு என்பதை கருத்திலே கொள்ள வேண்டும் என்றும், பயன்படுத்தப்படாத நிலத்தை பற்றிய விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்றும் தான் பா.ஜ.க. திருத்தத்திலே கூறப்பட்டிருக்கிறதே தவிர, மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டதாக வெளிப்படையாக கூறப்படவில்லை.

பாசமும் பற்றும்...
விவசாயிகளுக்காக தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மின்சார திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்தபோதே, விவசாயிகளிடம் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு பாசமும் பற்றும் உண்டு என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் விவசாயிகள் மறந்து விடுவார்களா என்ன?.

அடுக்கடுக்கான பொய்களா...?
மத்திய பா.ஜ.க. அரசின் நில எடுப்பு திருத்த மசோதா பற்றி ஜெயலலிதா கூறுவதெல்லாம் உண்மை என்றால், நில எடுப்பு திருத்த மசோதாவுக்கு எதிராக சமூக ஆர்வலர் மேதாபட்கர், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் திக் விஜய்சிங், பா.ஜ.க.வின் தோழமை கட்சியான சிவசேனா, பா.ஜ.க.வின் மற்றொரு தோழமை கட்சியான சிரோமணி அகாலிதள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கூறியிருப்பதும் அடுக்கடுக்கான பொய்கள் தானா?" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications