ரூ. 2 கோடியில் "அம்மா சுற்றுச்சூழல் பார்க்"... 110 விதியின் கீழ் ஜெ. அறிவிப்பு
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் 2 கோடி ரூபாயில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா சுற்றுச்சூழல் துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
சென்னை பெருநகரம், ஆவடி நகராட்சியின் எல்லையில் 87.06 ஏக்கர் பரப்பளவில், பருத்திப்பட்டு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்படுத்தப்படும். இந்த ஏரியில் தூர்வாருதல், நீர்வரத்து வாய்க்காலை மேம்படுத்துதல், நீரியல் தரத்தை சீராக்குதல் போன்ற பணிகள் 28 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். பறவைகள் வந்து செல்வதற்கு ஏற்ற இயற்கை சூழலுடன் கூடிய தீவுகள் ஏற்படுத்தப்படும்.

தண்டையார்பேட்டையில் கோக்ரேன் பேசின் ரோடு, கொருக்குப்பேட்டையில் 50,110 சதுர அடி அளவுள்ள நிலத்தை மேம்படுத்தி புல்வெளி, நடைபாதை, சிறுவர் பூங்கா, விளையாட்டுத் திடல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் போன்ற வசதிகள் உள்ளடக்கிய 'அம்மா சுற்றுச்சூழல் பூங்கா' ஒன்று 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் உள்ள பெரியகுளம் ஏரி, வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பெரியகுளம் ஏரி புனரமைக்கப்படும். இதனால் ஏரியின் உள்பகுதியில் பறவைகளுக்கு தேவையான நீர்பிடிப்புப் பகுதி கூடுதலாகும். ஏரி தூர்வாரப்பட்டு அழகுபடுத்தப்படுவதோடு, கரையைச் சுற்றி நடைபாதை அமைக்கப்படும். மேலும், மண்திட்டு அமைத்து மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குவதற்கு வசதிகள் செய்யப்படும். இந்தப் பணிகள் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாநகராட்சியில் அமைந்துள்ள முத்தம்பாளையம் ஏரி தூர்வாரும் பணி, நீர்வரத்து வாய்க்கால் மேம்படுத்தும் பணி போன்ற பணிகள், 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், ஒரு சுகாதாரமான சூழல் ஏற்படுவதுடன் நீர் ஆதாரமும் பெருகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.












Click it and Unblock the Notifications