ஜெ வழக்கு... நவம்பர் 23 முதல் கிளைமாக்ஸ்?
-ஆர்.மணி
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான இறுதி விசாரணை தேதியை உச்ச நீதி மன்றம் வரும் நவம்பர் 23 ம் தேதி முடிவு செய்யவிருக்கிறது. அதாவது க்ளைமாக்ஸின் தொடக்கம் இது.
அதுகுறித்துப் பேசும் முன் வழக்கின் ப்ளாஷ்பேக்... (நமக்குதான் மறதி அதிகமாச்சே!)
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை 66.65 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுதலை செய்து கர்நாடக உயர்நீதி மன்ற தனி நீதிபதி எஸ்.குமாரசாமி இந்தாண்டு மே 11 ம் தேதி தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதா 1991 - 1996 ம் ஆண்டு காலத்தில் ஆட்சியிலிருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அப்போதய திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. 18 ஆண்டு காலம் நடந்த இந்த வழக்கில் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கிய பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டீ ஜான் குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அனைவருக்கும் நான்காண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெ வுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். 22 நாட்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த ஜெயலலிதா வின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதி மன்ற தனி நீதிபதி சந்திரசேகரா கடந்தாண்டு அக்டோபர் 7 ம் தேதி தள்ளுபடி செய்தார். ஆனால் ஜெ உள்ளிட்ட நால்வருக்கும் பத்து நாட்கள் கழித்து அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி ஹெச் எல் தத்து தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜாமீன் வழங்கியது.

ஜெ உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுவை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறும் டிசம்பர் 18 ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதனடைப்படையில் இந்தாண்டு ஜனவரி 2 ம் தேதி மேல்முறையீட்டு விசாரணை நீதிபதி குமாரசாமி முன்னிலையில் துவங்கியது.
இதனிடையே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்து தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு காவல் துறை பிறப்பித்த உத்திரவு செல்லாதென்று திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் 15 ம் தேதி இரு வேறுபட்ட தீர்ப்பினை அளித்தது. அமர்வின் மூத்த நீதிபதி மதன் பி லோகூர் பவானி சிங் நியமனம் செல்லாதென்றும், வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டு விட்டதால் அரசு தரப்பு என்பது கர்நாடக அரசு தான் என்றும் ஆகவே கர்நாடகத்துக்குத் தான் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உண்டென்றும் தீர்ப்பளித்தார்.
ஆனால் மற்றோர் நீதிபதியான, தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி பவானி சிங் நியமனம் செல்லுமென்று தீர்ப்பளித்தார். இருவேறு தீர்ப்புகள் வந்ததால் வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு சென்றது. இதனை விசாரித்த நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு பவானி சிங் நியமனம் செல்லாதென்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் கர்நாடக அரசுக்குத்தான் உண்டென்றும் தீர்ப்பளித்தது.
இதனடிப்படையில் பிவி ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்து கர்நாடக அரசு உத்திரவு பிறப்பித்தது. மேலும் திமுக தரப்புக்கும் இதில் எதிர்வாதம் புரிய பாத்தியதை உள்ளதென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தவிர தனது தீர்ப்பினை வழங்கும் முன்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஊழல் நாட்டை எப்படி செல்லரித்து வருகிறது என்பதனையும் உயர்நீதி மன்றம் கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.
ஆனால் பரவலான எதிர்பார்ப்புக்கு மாறாக மே 11 ம் தேதி தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பில் ஆழமான கணிதப் பிழைகள் இருப்பதாகவும், ஆகவே இந்த தீர்ப்புக்கு தடை கேட்டும் கர்நாடக அரசும், திமுக வும் உச்ச நீதி மன்றம் சென்றன. ஜூலை 27 ம் தேதி இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்ட நீதிமன்றம் எட்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
மீண்டும் வழக்கு அக்டோபர் 12 ம் தேதி விசாரணைக்கு வந்த போது வழக்கில் ஜெ தரப்பு தங்களுக்கு கூடுதல் ஆவணங்களை தர வேண்டும் என்றும் வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைக்கு வேண்டும் என்றும் கர்நாடக அரசு சார்பில் வலியுறுத்தப் பட்டது. இதனை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஷ்வர் ராவ் கடுமையாக எதிர்த்தார். எனினும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசு தரப்புக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை நவம்பர் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
வழக்கு விசாரணையில் ஆச்சார்யாவுடன் சேர்த்து இந்த முறை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். இவர்தான் கடந்தாண்டு ஜெ உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தவறென்று விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டவர். துஷ்யந்த் தவே உச்ச நீதி மன்ற பார் அசோசியேஷன் சங்கத் தலைவர் என்பதும் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது.
அக்டோபர் 12 ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது துஷ்யந்த தவே ஆக்ரோஷமாக வாதாடியிருக்கிறார். கணிதப் பிழைகள் மிகுந்த தீர்ப்பினை, இயற்கை நீதிக்கு மாறான தீர்ப்பினை கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றும் இதனை தனது வாதத்தின் மூலம் நிருபிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் துஷ்யந்த் தவே கூறியிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்தக் கட்டத்தில் வழக்குப் பற்றி எதுவும் சொல்ல தாங்கள் தயாராக இல்லையென்றும் நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதிகளை நிர்ணயிக்கலாம் என்றும் கூறினர்.
அவ்வாறு தேதிகள் நியமிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணை நாள்தோறும் நடக்குமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பினருக்கும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க போதிய அவகாசம் கொடுக்கப்படுமென்றும் நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
வழக்கமாக ஜெ தரப்புத்தான் சொத்து குவிப்பு வழக்கில் ஏகத்துக்கும் வாய்தாக்கள் வாங்கி 18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்ததாகக் குறை கூறப்பட்டது. ஆனால் இந்த முறை கர்நாடக அரசும், திமுக தரப்பும் வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்டு வாய்தா வும் வாங்கி விட்டனர்.
தற்போதய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச் எல் த த்து வரும் டிசம்பர் 3 ம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதிகள் நியமனம் சம்மந்தமாக மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய அமைப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்பினை ஓய்வுக்கு முன்பாக தத்து வழங்கவிருக்கிறார். அதன் பின்னர் ஏற்படும் நிகழ்வுகளும், புதிய தலைமை நீதிபதியின் நியமனமும் ஜெயலலிதா வழக்கில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்பதுதான் திமுக தரப்பின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நவம்பர் 23 ம் தேதி அனேகமாக வழக்கு விசாரணையை தினசரி நடத்துவதற்கான தேதிகள் முடிவாகி விடுமென்றே எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி நிகழ்ந்தால் தீர்ப்பு தமிழக சட்ட மன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் ஏப்ரல் மே மாதங்களுக்கு முன்பாக வந்து விடுமென்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். இதுவரையில் ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாய்தா வாங்குவதில் எந்த முனைப்பும் காட்டவில்லை. விசாரணை துரிதமாக நடப்பதையே ஜெ தரப்பு விரும்புவதாகத் தெரிகிறது. இந்த நிலை நீடித்தால் கிட்டத்தட்ட இறுதித் தீர்ப்பு 2016 சட்ட மன்றத் தேர்தல்களுக்கு முன்பாக வந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
தீர்ப்பு எப்படியிருந்தாலும் அது அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி. இவ் வழக்கில் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு 18 ஆண்டுகளும், உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு ஏழரை மாதங்களும் ஆனது. உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பு விரைவில் வருவதற்கான அனைத்து சமிக்ஞைகளும் தெரிகின்றன.
ஜெயலலிதா மட்டுமல்ல, திமுக தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட பிரதான எதிர்கட்சி தலைவர்களும் கைகளைப் பிசைந்து கொண்டும், பதை பதைப்புடனும்தான் உச்ச நீதிமன்றத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். 19 ஆண்டுகால வழக்கின் இறுதி கிளைமாக்ஸ் காட்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது!
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications