பிரதமருக்கு முற்றுகிறது நெருக்கடி... இலங்கை போகக் கூடாது.. ஜெயந்தி நடராஜனும் கோருகிறார்

இவரையும் சேர்த்தால் தற்போது நான்கு மத்திய அமைச்சர்கள், பிரதமர் இலங்கை போவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவிருப்பதாக வந்துள்ள செய்திகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்து கொள்ள கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்றார் ஜெயந்தி.
இசைப்பிரியா கொல்லப்பட்ட ஆவணப் படம் குறித்த கேள்விக்கு, ஆவண படத்தை ஊடகங்கள் மூலமும் பத்திரிகை மூலமும் அறிந்து கொண்டேன். அந்த காட்சிகளை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் ஜெயந்தி நடராஜன்.
பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் ரூ.650 கோடி செலவாகி உள்ளது. இது வீணாக செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், வெளிநாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்குத்தான் பிரதமர் மன்மோகன்சிங் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தான் ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்த முடியும்.
இதனால் தொழில்கள் வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அன்னிய செலாவணியை உயர்த்த வெளி நாட்டு சுற்றுப்பயணம் அவசியமாகிறது. இது மக்களின் நலன் கருதி நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிற பயணம். இதை வீணான செலவு என்று கூறுவது தவறு என்றார் அவர்.












Click it and Unblock the Notifications