Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 1000 கோடி ஜாஸ் சினிமா: இந்த சொத்தை சசி வாங்க முதலீடு செய்தது யார்?- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள திரையரங்குகளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நீண்ட நெடுங்காலமாக 24 மணி நேரமும் உடன் இருந்து வரும் ஒருவருடைய குடும்பத்தினர் வாங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கோடிக் கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா?" என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்துவில் செய்தியை வெளியிடாமல் தடுக்க முயற்சி நடந்தது...

600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள திரையரங்குகளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நீண்ட நெடுங்காலமாக 24 மணி நேரமும் உடன் இருந்து வரும் ஒருவருடைய குடும்பத்தினர் வாங்கியிருக்கிறார்கள் என்ற செய்தியினை "தி இந்து" ஆங்கில நாளிதழ், ஆதார பூர்வமாக வெளியிட்டது. அந்தச் செய்தி வெளி வருவதற்கு முன்பாகவே, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சி நடைபெற்றதாகவும், அந்தச் செய்தியை வெளியிட்ட செய்தியாளர், நிர்வாகத்தினரால் அழைத்துக் கடிந்து கொள்ளப்பட்டதாகவும் கூட ஒரு தகவல் வந்தது.

Jazz cinemas: Karunanidhi asks Jayalalitha who is financing these deal?

அரசு சார்பில் பத்திரிக்கைகளுக்கு நெருக்கடி...

அந்த நிர்வாகத்தினருக்கு அரசு சார்பில் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. "இந்து" நாளிதழில் வெளி வந்த அந்தச் செய்தியையொட்டி, நானும் விரிவாக ஓர் அறிக்கையை வெளியிட்ட போது, அந்த அறிக்கையை "இந்து" நாளிதழும், வேறு சில முக்கிய நாளேடுகளும் வெளியிடாமல் தடுக்கப்பட்டன என்றும்; வழக்கமாக நடைபெறும் இருட்டடிப்பு முயற்சி இது என்றும் நான் அறிந்தேன்.

ஜெயலலிதாவின் இரட்டை முகங்கள். ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை என்பது மக்களாட்சிக்கு உரம் சேர்ப்பதாகும் என்பதை ஒதுக்கித் தள்ளிவிட்டு; குறைகள், குற்றங்கள், கொள்ளையடிக்கும் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வர முயற்சிக்கும்போது, அவற்றை இரும்புத் திரை கொண்டு மூடுவதும், இருட்டடிப்பு செய்வதும் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

இந்த சொத்துக்களை வாங்க பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்?

எனது அறிக்கையில், "இவ்வாறு கோடிக் கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா?" என்ற முக்கியமான கேள்விகளைக் கேட்டிருந்தேன். தமிழகத்தில் நான் மட்டும் இந்தப் பிரச்சினை பற்றி அறிக்கை வெளியிடவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த சசிகலா, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். மீண்டும் சாராயம் விற்றதிலிருந்து வந்த பணத்தை வைத்து 11 தியேட்டர்களை வாங்கியுள்ளார். இதுகுறித்து சி.பி., சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, அவரைக் கைது செய்ய வேண்டும்" என்றே வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.கவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், "சென்னையில் சசிகலா குடும்பத்தினர் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திரையரங்குகளை மிரட்டி விலைக்கு வாங்கிக் குவித்திருப்பது கண்டனத்திற்குரியது. புதிய சொத்துக் குவிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

உருட்டியும், மிரட்டியும், அதிகார பலத்தைக் காட்டியும் வாங்கியுள்ளனர்...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்த அறிக்கையில், "தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் உடன்பிறவா சகோதரி என்றும், தன் குடும்ப உறுப்பினர் என்றும், தோழி என்றும் சொல்லப்படுகின்ற சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் ஜெ. இளவரசி, கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தப்பர் சத்தியமூர்த்தி ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டுள்ள "ஜாஸ் சினிமா" நிறுவனம் சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களில் இயங்கி வருகின்ற சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள திரையரங்குகளை அதன் உரிமையாளர்களிடமிருந்து உருட்டியும், மிரட்டியும், அதிகார பலத்தைக் காட்டியும் வாங்கி யுள்ளதாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த கால அதிமுக ஆட்சியில் பல இடங்களில் நிலங்களாக சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள், தற்போதைய அதிமுக ஆட்சியில் கட்டிடங்களாக வாங்கிக் குவிக்கிறார்கள் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு இதற்குரிய விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில், இந்தத் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது பற்றியும், மிரட்டி வாங்கப்பட்ட சொத்துக்கள் தான் இவை என்பது பற்றியும் விரிவாகவே கூறியிருக்கிறார்.

சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்...

ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் வைகோ விடுத்த அறிக்கையில், "கடந்த நான்கரை ஆண்டுக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கொள்ளை அடித்துள்ள கோடானு கோடி ரூபாயைப் பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் என்றால், சந்தேகத்தின் நிழல் முதல்வர் ஜெயலலிதா மீதும் படிந்துள்ளது என்பதை மறைக்க முடியாது. எனவே, ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம் ஊழல் மூலம் முறைகேடான வகையில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர், தோழர் ஜி. ராமகிருஷ்ணன், நாகர்கோவிலில் அளித்த பேட்டியில், "சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் உள்ள நிலையில் சசிகலா குடும்பத்தினர் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திரையரங்குகளை வாங்கியது, பல்வேறு கேள்விகளை யும், சந்தேகங்களையும் எழுப்புகிறது. இது தொடர்பாக வருமான வரித் துறை யினரும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர், தோழர் முத்தரசன் அளித்த பேட்டியில், "ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை வாங்க ஜெயலலிதாவின் தோழிக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்கிருந்து பணம் வந்தது என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். ஆவண ஆதாரங்களுடன் கிடுக்குப்பிடியாக புகார் எழுந்துள்ள நிலையில், ஜெயலலிதா மழுப்பாமல் பதில் அளிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

புதிய சொத்துக் குவிப்புக்கு என்ன பதில்...

சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், இந்தப் புதிய சொத்துக் குவிப்புக்கு என்ன பதில் என்று நாடே எதிர்பார்க்கிறது; நாமும் எதிர் பார்க்கிறோம்.

பதினெட்டு ஆண்டுகளாக மேலும் கீழும் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட 65 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில், கடைசியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்றத்தில் பிழையான கூட்டல் கணக்கின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு தற்போது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும்போது, அந்த வழக்கில் முதலமைச்சரோடு இணைந்து தண்டிக்கப்பட்டவர்கள் மீது இப்படிப்பட்ட கடுமையான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரங்களுடன் வந்திருக்கிற போது, அரசுப் பொறுப்பிலே இருப்பவர்கள் இது வரை இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று அனைவரும் யூகித்திடத் திடமான இடம் ஏற்பட்டு விட்டது அல்லவா? எனவே மக்கள் மனதிலே எழுந்துள்ள பொருள் பொதிந்த வினாக்களுக்கு விளக்கமான பதிலை அரசு தரப்பில் உடனடியாக தர வேண்டும்.

அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது?....

ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் இந்தத் திரையரங்குகளை வாங்கினார்களா? இல்லையா? வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு அந்தச் சொத்துகள் வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா? அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உரியவர்களிடமிருந்து பதில் வர வேண்டாமா? இந்தச் சொத்துக்களை வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஏற்கனவே லஞ்ச ஊழல் குற்றத்திற்காக வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா? ஏற்கனவே பல சொத்துக்களை அவர்கள் வாங்கியதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லவா?

மக்களுக்கு இந்த விவகாரங்கள் எங்கே விளங்கப் போகிறது என்ற மமதை...

எவரையும் ஏளனம் செய்து, எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசி, எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்ற மலினமான மனப்பான்மையில் வெகுமக்கள் தானே; அவர்களுக்கு இந்த விவகாரங்கள் எங்கே விளங்கப் போகிறது என்ற மமதையோடு "முட்டாள்களின் சொர்க்கத்தில்" மூழ்கியிருப்போர் இப்போதாவது விளக்கத்தோடு மக்களைச் சந்திக்க வேண்டாமா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+