அதெப்படி அண்ணாமலையை விமர்சிக்கலாம்? ஆதவ் அர்ஜூனாவுக்கு 'மச்சான்' சார்லஸ் கடும் எச்சரிக்கை!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனாவின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஆதவ் அர்ஜூனா மனைவியின் அண்ணனாகிய, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தின் பெயரை ஆதவ் அர்ஜூனா தவறாக பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் எனவும் ஜோஸ் சார்லஸ் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பவர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ். அவருக்கு புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது சகோதரியைத்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் ஆதவர் அர்ஜூனாவின் மச்சான் ஜோஸ் சார்லஸ் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓய்வின்றி உழைக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தகாத வார்த்தைகளால் ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன்.
மேலும், மாமனார் பணத்தை ஆதவ் அர்ஜூனா தவறாக பயன்படுத்துகிறார்" என்ற அண்ணாமலையின் கருத்தை ஆதரிக்கிறேன். என் தந்தையின் பணத்தை, எங்கள் குடும்பத்தின் மரியாதையை தேவையற்ற பிரச்சனைகளால் கெடுத்து வருகிறார் ஆதவ் அர்ஜூனா. பதவி மற்றும் பொருளாதாரப் பேராசை காரணமாக பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார் ஆதவ் அர்ஜூனா. அவருடைய முட்டாள் தனமான செய்கிற செயல்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இதேபோல ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வந்தால் நாங்கள் வழக்கு தொடருவோம். என கடுமையாக விமர்சித்துள்ளார். ஜோஸ் சார்லஸின் இந்த எக்ஸ் பக்க பதிவை பாஜக நிர்வாகிகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
I state my objection and apology against Arjun adhava’s unparliamentary statement against Tamil Nadu BJP president Thiru k Annamalai who is tirelessly working towards welfare of the people of Tamil Nadu. I also support his statement that “ he is misusing his father in laws money…
— Jose Charles Martin (@sscharles) March 31, 2025
அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, திமுகதான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை செட் செய்து வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும் போது ஆடு தொடர்பே இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும் தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவேன் என எச்சரித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் சொந்த மச்சானே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications