For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ்ங்க பார்க்கும் "கேப்டன்" வேறு.. பத்திரிகையாளர்களின் பாராட்டில் விஜயகாந்த்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது நாடறிந்த செய்தி... பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போதே காறி உமிழ்ந்தது, தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க என உஷ்ணமாகிப் போனது, விமான நிலையத்தில் அடித்து துவைத்தது என தொடர் கதையாக இருக்கிறது..

ஆனாலும் பத்திரிகையாளர்கள் பலரும் விஜயகாந்த் மீது நல்லெண்ணம் வைத்திருக்கிறார்கள்... விஜயகாந்த் இன்று 65-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்...அவருக்கு வாழ்த்து தெரிவித்து பத்திரிகையாளர்கள் சிலர் போட்ட ஃபேஸ்புக் பதிவுகள்.

Saravanan Chandran

அவரை முதன் முறையாகச் சந்திக்கச் சென்ற போது சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து கொண்டிருந்தது. ஒருவருடத்திற்கு முன்பு பெய்ததே அதே மாதிரி இல்லாவிட்டாலும், அதற்கு இணையாகப் பெய்த மழை அது. சிட்டி செண்டர் கார் பார்க்கிங்கில் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

நான் இந்தியாடுடேவில் ஒரு பேட்டிக்காகச் சென்றிருந்தேன். இன்னார் வந்திருக்கிறார் என்று சொன்னதும் நான் நனைந்து வந்திருப்பதைப் பார்த்துவிட்டு பதறியடித்து ஓடிவந்தார்.

அங்கிருந்த லைட் மேனை வரச் சொல்லி குளிருக்கு இதமாக என் பக்கமாய் லைட்டுகளைத் திருப்பிப் பிடிக்கச் சொன்னார்.

Journalists wishes Vijayakanth

நான் கூச்சத்தோடு அவர் கொடுத்த டவலைக் கொண்டு தலைதுவட்டிக் கொண்டிருந்த போது, வம்படியாய் என்னுடைய கைகளில் இருந்து அதைப் பிடுங்க வந்தார்.

நான் சுதாரித்துக் கொண்டு ஒழுங்காகத் துவட்டினேன். எந்த ஊர்டா தம்பி என்றார். நான் சொல்லப் போகும் பதில் அவருக்குப் பிடிக்கும் எனத் தெரியும் என்பதால் மெல்லிய சிரிப்போடு சொன்னேன். மதுரை, காக்காத் தோப்பு. அட்டகாசமாகச் சிரித்தார்,

உடனடியாக என்னுடைய தோள்மீது கைகளைப் போட்டுக் கொண்டு சம்பளம் உள்ளிட்ட பிற விஷயங்களை விசாரித்தார். ஏற்கனவே சாப்பிட்டு விட்டுத்தான் போயிருந்தேன்.

ஆனாலும் திரும்பவும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார். அவர் வற்புறுத்தினால் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் முணுக்கென்று கோபம் வந்துவிடும் என்றார் அவரது உதவியாளர்.

அவர் அன்று அரசியல் குறித்து பலதும் பேசினார். அடியாழத்தில் ஏதாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் என்கிற அவரது தாகத்தைத் தெளிவாக உணர முடிந்தது.

அவர் இயல்பாய் பேசிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவரது அரசியல் உதவியாளர் குறுக்கிட்டு இந்தப் பதிலைச் சொல்லுங்க, அந்தப் பதிலைச் சொல்லுங்க என எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்ததை என்னால் உணர முடிந்தது.

ஆனால் எனக்கு அந்த விஷயம் உறுத்தலாகவே இருந்தது. அவரது இயல்பை, அவரது அடியாழ ஆசையை இவர்கள் களவாடி விடுவார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது.

அதுதான் இப்போது நடந்தும் இருக்கிறது. அவர் நடிகராக இந்தத் திரையுலகிற்கு நிறையச் செய்திருக்கிறார். நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்த போது நிறைய நற்காரியங்கள் செய்திருக்கிறார்.

அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வழியாக காதும் காதும் வைத்த மாதிரி நிறைய உதவிகள் செய்திருக்கிறார். அவரால் வாழ்ந்தவர்கள் அவர் குறித்துச் சொன்ன பல நன்னம்பிக்கைக் கதைகளைக் கேட்டிருக்கிறேன்.

அவரது நேர்மைகூட பல சமயங்களில் வெளிப்பட்ட கதைகளைக் கேட்டிருக்கிறேன். உதாரணமாக என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய கட்சியில் இருக்கிறார்.

கட்சி ஆரம்பித்த புதிதில் திருநெல்வேலிக்குப் போயிருக்கிறார்கள். அப்போது அவர் தங்கியிருந்த இடத்திற்கு இரண்டு பெரிய சூட்கேஸ்களுடன் சிலர் வந்திருக்கிறார்கள். என்னவென்று இவர் விசாரித்த போது, மணல் மனிதர் அனுப்பியது என்றும் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இவர் விடாப்பிடியாகச் சந்திக்க மறுத்து விட்டார் என்று சொன்னார் அந்த நண்பர். என்னுடைய நண்பர் எப்போதும் என்னிடம் கூட்டிக் குறைத்துப் பேசுவதில்லை என்கிற முன்வரலாறு காரணமாக அவர் சொன்ன சம்பவத்தையும் நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்னும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அரசியல் என்று வரும் போது சில பல சாம பேத தான தண்ட முறைகளை அவரும் செய்திருக்கிறார்.

அதை மறுப்பதற்கில்லை. யார்தான் செய்யவில்லை?

இத்தனை இருந்தும் கடந்த தேர்தலில் அவர் ஏன் காமெடியனாக சித்தரிக்கப்பட்டார் என்ற கேள்வி இயல்பாய் எனக்குள் எழுகிறது. நான் முதன் முதலாகச் சந்தித்த போது, அவரைப் பேச விடாமல் தடுத்த அவரது அரசியல் உதவியாளரைப் போல, இன்றும் அவரைத் தடுக்கிற சக்திகளிடமிருந்து அவர் தன்னைப் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல்நிலை சரியில்லை என்பதை உரக்கச் சொல்வதில் இவர்களுக்கு என்ன கேடு வந்துவிட்டது? ஊடகங்களும் கொஞ்சம் புரிந்து கொண்டு அவர் மீண்டு எழுந்து வர உதவி செய்திருக்கலாம்.

உடல்நிலை சரியில்லாதவரை படுத்தி எடுத்தால், ஏற்கனவே இருக்கிற உடல்நலம் சார்ந்த மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்கிற குறைந்தபட்ச புரிதலோடு செயல்பட்டிருக்கலாம். அவரை அவருடன் இருப்பவர்களே சரியான முறையில் பொஷிஷனிங் செய்யவில்லை என்கிற வருத்தம் நிறையப் பேரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அவர் மீண்டு வர வேண்டும். அவர் பழைய பன்னீர்செல்வமாக மீண்டு வர வேண்டும். ஒரு மதுரைக்காரனாக அதை நான் மனப்பூர்வமாக எதிர்நோக்குகிறேன். வாங்க கேப்டன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த்!

Dhinesh Kumar S

Happy Birthday Captain...

ஊடகங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் காட்சிப்படுத்தப்படும் கேப்டனுக்கும் எனது வாழ்வில் சந்தித்த கேப்டனுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

Journalists wishes Vijayakanth

உண்மையில் கேப்டன் நல்ல மனிதர்.. நல்ல தலைவர். அவரைப்பற்றி பொதுவெளியில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்துமே அபத்தம்..

கேப்டன் பல்லாண்டுகள் வாழ வேண்டும்..

English summary
Here the Journalists view on DMDK leader Vijayakanthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X