எல்லாவற்றுக்கும் இந்த வைகோதான் காரணம்.. கி.வீரமணி கோபம்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியை தவறான திசையில் இழுத்துச் சென்றவர் வைகோ தான் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி பெற்றுள்ள அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுகவுக்கு அதன் பொதுச்செயலாளருக்கு அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்று ஒலி காட்டிய தேர்தல் முடிவு:
இந்தத் தேர்தல் முடிவு பல உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது. கொஞ்சகாலமாக திராவிட இயக்க ஆட்சிகளுக்கு மாற்று அணி என்ற ஒரு முழக்கம் பெரிய அளவில் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அது வெற்று ஒலி என்று தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிட்டன.

மக்கள் நலக் கூட்டணியின் தவறு!
5 ஆண்டு காலம் நல்லாட்சியைத் தரத் தவறிய ஓர் ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்றால், ஆளுங்கட்சியை வீழ்த்தும் வல்லமை மற்றும் சக்தி உள்ள கட்சியை தேர்வு செய்திருக்க வேண்டும்.

வைகோவின் தவறான திசை:
வைகோ தான் இந்த அணியை தவறான திசைக்கு அழைத்துச் சென்றவர். யார் மீதோ உள்ள கோபத்திலோ, அவசர ஆத்திரக் கோலத்தை அள்ளித் தெளித்து விட்டார். மதிமுகவில் உள்ள பொறுப்பாளர்களின் கருத்துக்கு விரோதமாக அவர் நடந்து கொண்டது பற்றி, மதிமுகவின் பொறுப்பான இடத்தில் அங்கம் வகித்தவர்கள் கூறியதை சகோதரர் காலந்தாழ்ந்தாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

கட்சிக்காரர்களை மதிக்காத தேமுதிக;
கட்சிக்காரர்களின் உணர்வுகளை மதிக்காமல் தவறாக வழிகாட்டியவர்கள் பின்னால் நடந்து சென்றதால், தேமுதிக தலைமை தாங்கிய அணிக்கு சட்டசபை தேர்தலில் ஓரிடம்கூட கிடைக்கவில்லை

விடுதலைச்சிறுத்தை கட்சியின் நிலை;
நமது வேதனையும், வருத்தமும் விடுதலைச் சிறுத்தைகள் பற்றிதான்; கூட்டாட்சிக்கு ஒப்புக் கொள்ளும் கட்சியோடுதான் கூட்டணி என்று கூறிய எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள், அதற்கான சாத்தியக் கூறு என்ன என்பதை நடைமுறைக் கண்ணோட்டத்தோடு பார்த்திருக்க வேண்டும்.

பா.ம.க. பாடம் கற்குமா?
அடுத்த முதல்வர் டாக்டர் அன்புமணி என்ற முழக்கத்தோடு புறப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டும் முடிவு என்ன? ஜாதி கட்சிகளை ஒருங்கிணைத்து தலித்- தலித் அல்லாதார் என்று ஓர் அணியை உருவாக்க முயன்றவருக்கு தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டது.

யார் இவர்?
தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும், கொச்சைப்படுத்தி எதிரிகளின் கால்களைத் தேடும் ஒரு கட்சி 232 இடங்களில் போட்டியிட்டு கணக்குத் திறக்கப்பட முடியாமலேயே - அடையாளம் தெரியாமலேயே புதைக்கப்பட்டுவிட்டது! அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர் அதன் அமைப்பாளர் உட்பட!

பாஜகவுக்குப் பாடம்
கெடுதலிலும் பாஜக கட்சிக்கு பிரதமர் 2 முறையும், மத்திய அமைச்சர்களும் படை எடுத்து பிரச்சாரம் செய்தும் அக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்துத்துவா சக்திகளுக்கு இடமில்லை என்பதை மீண்டும் பறையடித்துச் சொல்லிவிட்டது தமிழ்மண்.

மக்கள் ஒன்றிணையவில்லை:
மக்கள் நலனுக்கும், மக்களாட்சிக்கும் விரோதமான ஆட்சியை வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணையவில்லை. வாக்குகள் சிதறியது வாய்ப்பாக அமைந்துவிட்டது.. திமுக கூட்டணிக்கும் அஇஅதிமுக கூட்டணிக்குமிடையே உள்ள வாக்கு சதவீத வித்தியாசம் என்பது வெறும் 1.2 சதவீதமே! அ.தி.மு.கவிற்கு வாய்ப்பு குறைவு என்று கருத்துக்கணிப்பு வெளிவந்த நிலையில், அந்தத் தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்தி, "கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து" அதை சரி செய்து விட்டனர் போலும்!

திமுக விஸ்பரூபம்:
இப்பொழுது ஏற்பட்டுள்ள தோல்வி என்பது பரிதாபத்திற்குரியதல்ல- கம்பீரமான தோல்வி என்றே சொல்ல வேண்டும். இதுவரை இதுபோன்ற வலிமையான எதிர்க்கட்சியை தமிழ்நாடு சட்டமன்றம் கண்டதில்லை; திமுக "விஸ்வரூபம்" எடுத்துள்ளது!

காங்கிரஸ் மீது கோபம்:
ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களுக்கு காங்கிரசின் மீதுள்ள கோபம் இன்னும் தணிந்து விடவில்லை என்பதையும் அலட்சியப்படுத்திட முடியாது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, மதுவிலக்கு, சமூகநீதி, மதச்சார்பின்மை, மக்கள் நல திட்டங்கள், ஜனநாயக முறையில் சட்டமன்றத்தை நடத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் அஇஅதிமுக ஆட்சி சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications