'காலா' முதல்கட்ட ஷூட்டிங் ஓவர்... நாளை சென்னை திரும்புகிறார் ரஜினி! ரசிகர்களை சந்திக்கவும் முடிவு
மும்பையில் நடந்த 'காலா' பட முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், நாளை சென்னை திரும்புகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை: 'காலா' படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். அப்போது, ரசிகர்களை மீண்டும் சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.
ரசிகர்களை ரஜினி சந்திக்க உரிய ஏற்பாடுகளை ரஜினி தரப்பினர் படுவேகமாகச் செய்துவருகிறார்கள். ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கும் நடக்கும் என்றும் அல்லது வேறு மண்டபத்தில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 164ம் படம் 'காலா'. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி மும்பையில் தொடங்கியது.
ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர் படத்தின் கதையை லீக் செய்துவிட்டார் என்று பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.

ஓல்ட் மேன் கெட் அப் ரஜினி
இது நெல்லையில் இருந்து மும்பை சென்று வாழ்பவர்கள் தொடர்பான கதை. எனவே, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி ஓல்ட்மேன் கெட்டப்பில் நடித்து வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் தொடர்ச்சியாகப் படமாக்கப்பட்டு வருகின்றன.

முதல் ஷெட்யூல் ஓவர்
10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற 'காலா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாளை முடிவடைகிறது. இதையடுத்து, ரஜினி நாளையே சென்னை திரும்புகிறார். மும்பையில் பருவ மழை தொடங்கிவிட்டது. எனவே அடுத்து சென்னையில் 'காலா' படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சென்னையில் தாராவி
சென்னையில் ஏற்கனவே தாராவி செட் போடப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு ரஜினி சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

ரசிகர்களுடன் போட்டோ
இதற்கிடையே இந்த மாதம் நடுவில், அல்லது 3ம் வாரத்தில் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் அறிவிப்பு
விடுபட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை இந்த மாதம் சந்திப்பார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஜினி அவரது அரசியல் பிரவேசம் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications