கபாலிகளும் மலேசியாவும்... 'தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா'!
கபாலி படத்தில் இடம்பெற்ற பாடலில் 'தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன் டா' என்ற வரிகள் ரஜினிக்காக எழுதப்பட்டது என்ற கருத்து நிலவியது. மலேசியத் தமிழர் நலன்களுக்காக பாடுபட்ட ஒருவருக்கும் இது பொருந்தும் என இப்போது தெரிய வந்துள்ளது.
2015 ஏப்ரல் மாதம் யூ டியூபில் வெளியிடப்பட்ட '20ம் நூற்றாண்டு மலேசிய தமிழர் வாழ்க்கைச் செய்திகள்' என்ற ஆவணப் படத்திலுள்ள பல தகவல்கள் கபாலி படத்தில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

பேராசிரியர் டாக்டர் ரெ. கார்த்திகேசு
மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற, பிரபல எழுத்தாளருமான டாக்டர் ரெ.கார்த்திகேசு, கடந்த 75 ஆண்டுகால மலேசிய வரலாற்றைப் பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கள் இறக்கும் தொழில் செய்த குடும்பத்தைச் சார்ந்தவர் டத்தோ ஆகி மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறியுள்ளார்கள் என்றும் கூறும் அவர், கிட்டத்தட்ட 30 சதவீத தமிழர்கள் வறுமையில் இருப்பதால், அவர்களில் பலர் குற்றவாளிகளாகவும், போதைப் பழக்கத்திற்கு அடிமைப் பட்டு இருப்பதாகவும் வருத்தப்பட்டுள்ளார்.

பெரியாரும் முடிவெட்டுத் தோழர்களும்
1950 - 60 காலக் கட்டத்தில் பெரியாரின் கொள்கைகளை பரவலாக எடுத்து சென்றவர்கள் முடிவெட்டும் தோழர்கள் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். இரண்டு தடவை பெரியார் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
முடிவெட்டும் தோழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாகவும், திராவிட கழக கொள்கைகள் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்றும், அவர்கள் தமிழ் மொழியையும் சீர்திருத்திருத்த கருத்துக்களைப் பரப்பினார்கள் என்றும் கூறியுள்ளார். அனைவரும் ஒன்றாகத் தங்கி, உண்டு சமத்துவமாக வாழ்ந்துள்ளார்கள்.

அம்பேத்கர்
புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளை அதிகமாகப் பகிர்ந்து கொண்டதும் இந்த தோழர்கள்தான் என்பது முக்கியமானது. கபாலியில் அம்பேத்கர் படங்கள், அம்பேத்கர் பற்றி ரஜினி பேசும் வசனங்கள் இடம்பெற்றதன் பின்னணி இது.
தமிழ்ப் பத்திரிக்கைகளும் , மலேசிய தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வெளியே அதிகம் தமிழ்ப் பள்ளிகள் கொண்ட நாடு மலேசியா தான், என்ற தகவலும் உண்டு..அனைத்துப் பாடங்களும் தமிழில் சொல்லித் தரப்படுகிற பள்ளிகள் ஆகும்.

மலேசியத் தமிழர்களுக்காக சிங்கப்பூர் கோ. சாரங்கபாணி
தோட்டத் தொழிலாளர்கள் மற்ற சமூகத்துடன் ஒன்றி வாழ முடியாமல் தனிப்பட்டு, தமிழ் மரபுகளை மறந்து சோர்ந்து போயிருந்த நேரத்தில், சிங்கப்பூர் கோ. சாரங்கபாணி தமிழர் திருநாள் விழாவை மலேசியா முழுவதும் ஆரம்பித்துள்ளார்.

இவரும் தமிழன்தானே?
பொங்கல் விழாவை ஒட்டி நடைபெறும் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கியவாதிகளை அழைத்து வந்து சிற்றூர் உட்பட மலேசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வாராம்.
கி.ஆ.பெ.விசுவநாதன், தனி நாயகம் அடிகளார் உள்ளிட்டவர்களை மலேசியா முழுவதும் அழைத்துச் சென்றுள்ளார். சிங்கப்பூரில் தமிழ் முரசு என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்துள்ளார்.
தோட்டத் தொழிலாளத் தமிழர்களுக்கு சீர்திருத்த எண்ணங்களை உருவாக்கி ஒன்றிணைக்க பாடுபட்டவராம். திராவிடப் பற்றாளரான சாரங்கபாணி பிறப்பால் தெலுங்கர் என்றாலும் வாழ்நாள் முழுவதும் தமிழராகவும் தமிழர்களுக்காவும் வாழ்ந்தார், என்று பேராசிரியர் கார்த்திகேசு குறிப்பிட்டுள்ளார்.
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன் டா என்ற வரிகள் இவருக்கும் பொருந்துகிறதல்லவா!
இன்றைய சிக்கல்கள்
ரப்பர் தோட்டங்கள் அழிந்து செம்பனைத் தோட்டங்களாக மாறியதையும் குறிப்பிடுகிறார். கபாலி படத்தில் இது நாசருடைய பேச்சிலும் இடம்பெற்றிருக்கும். தோட்டங்கள் இல்லாமல் போனதால் நகர்ப்புறத்திற்கு வேலைக்காக தொழிலாளர்கள் குடி பெயர்ந்துள்ளார்கள். அங்கே சவால்களைச் சந்தித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம் என்றாலும் தோல்வியுற்று ஏழ்மையில் வாழ்பவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் இருக்கும் என்கிறார்.
பொருளாதாரத்தில் உச்சத்தில் தமிழர்கள் இருந்தாலும், வறுமையில் இருக்கும் தமிழர்கள் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. போதை மருந்து குற்றவாளிகளில் மலாய் இனத்தவர்களுக்கு அடுத்து தமிழ் இளைஞர்கள் பெருமளவில் இருப்பது வருத்தமளிக்கிறது.
ஏழ்மையின் காரணமாக குற்றவாளிகளாகவும், போதை மருந்துக்கு அடிமையாகவும் ஆகி விடுகிறார்கள். அவர்களைச் சீர்திருத்தி முன்னேற்றமடையச் செய்ய பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
கபாலி நடத்தும் சீர்திருத்த பள்ளியில் மாணவர்கள் முன்னாள் குற்றவாளிகள், போதைமருந்துக்கு அடிமையானவர்களாக காட்டப்பட்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பணி செய்து வந்தாலும், இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கிறது என்றும் பேராசிரியர் கார்த்திகேசு கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டு ஏப்ரல் 2015 ல் தமிழ் அறக்கட்டளையின் வெளீயீடாக வந்துள்ள இந்த வீடியோவை டாக்டர் சுபாஷிணி பதிவு செய்துள்ளார். உடன் டாக்டர் கண்ணனும் பங்கேற்றார். கபாலி படம் பற்றிய ஆரம்பக் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கும் முன்னதாகவே இது யூ டியுபிலும் வெளியாகியுள்ளது.
கபாலி படத்திற்காக பல்வேறு தகவல்களை படித்ததாக கூறும் பா.இரஞ்சித் இந்த வீடியோவைக் கூட பார்த்திருக்கக் கூடும்.
வசூலில் சக்கை போடும் கபாலி தமிழகத்தில் வெவ்வேறு விதமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. தவிர இன்றைய இணைய வெளித் தமிழர்களிடம் மலேசிய தமிழர்கள் மீதான ஆர்வத்தையும் 'கபாலி' ரஜினி உருவாக்கி விட்டார் என்றால் மிகையல்ல.
-இர தினகர்












Click it and Unblock the Notifications