குடிப்பழக்கம் கிடையாது! 25 வருஷமாக கள்ளச்சாரயம் விற்பனையில் கல்லா கட்டிய கண்ணுக்குட்டி யார்? பின்னணி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட கண்ணுகுட்டி, அவருடைய சகோதரர் தாமோதரன் மனைவி விஜயா மற்றும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 900 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த கண்ணுக்குட்டி யார் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து தற்போதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

14 நாள் நீதிமன்ற காவல்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான கண்ணுகுட்டியை நேற்று முன் தினம் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவலில் கடலூர் சிறையில் அடைக்கப்படுட்டு இருக்கும் இந்த கண்ணுக்குட்டியை பற்றியை விவரங்கள் வருமாறு:-
கடை போட்டு விற்பனை: கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்தான் கண்ணு குட்டி என்ற கோவிந்தராஜ். இவர் கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார். சொல்லப்போனால் இவருடய வீடு இருக்கும் பகுதியை சாராயக் கடை என்றே அப்பகுதி சொல்லும் அளவிற்கு கண்ணுக்குட்டி சாராயம் விற்பனை செய்தது பட்டவர்த்தனமாக தெரிந்துள்ளது.
50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்க கூடிய கள்ளச்சாராய பாக்கெட்டுகளை முதலில் ஆற்றங்கரையோரம் மறைவாக கண்ணுக்குட்டி விற்பனை செய்து வந்துள்ளார். பிறகு சிறிது காலம் கழித்து தனது வீட்டின் அருகே சிறிய கொட்டகை ஒன்றை அமைத்து அங்கே சாரயக் கடை போட்டு விற்பனை செய்ய தொடங்கியிருக்கிறார்.
24 மணி நேரமும் கிடைக்கும்: விற்பனை அதிகரிக்க தொடங்கியதால் இன்னொரு வீட்டை தனியாக வாடகைக்கு எடுத்து அங்கே கள்ளச்சாராயத்தை வைத்து குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே இவர் விற்பனையை தொடங்கிவிடுவார் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் அங்கு கிடைக்குமாம்..
இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் இருக்க கூடிய சுடுகாட்டு ஓரம் தான் இந்த கள்ளச்சாராய விற்பன நடைபெற்று வந்து இருக்கிறது.
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
25 ஆண்டுகளாக விற்பனை: கடந்த ஆண்டு விழுப்புரம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு பிறகு சில மாதங்கள் கள்ளச்சாராயம் விற்பனைக்கு பிரேக் போட்டு இருக்கிறார் கண்ணுக்குட்டி. ஆனாலும் அடுத்த சில மாதங்களில் போலீசாரை சரி கட்டி சாராய விற்பனையை தொடங்கியிருக்கிறார். தன்னுடய சகோதரர் தாமோதரன் மற்றும் மனைவி விஜயா ஆகியோருடன் சேர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்து இருக்கிறார் கண்ணுக்குட்டி.
சுற்று வட்டார கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள், திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கும் மொத்தமாக கள்ளச்சாராய விற்பனை செய்து வந்து இருக்கிறார் கண்ணுக்குட்டி. 25 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வரும் கண்ணுக்குட்டி, தனது சகோதரர் தாமோதரன் மூலம் காவல்துறை நடமாட்டத்தை நோட்டமிட்டவாறு கள்ளச்சாராய விற்பனை செய்து வந்து இருக்கிறார்.
70 வழக்குகள்: கண்ணுக்குட்டி மீது ஏற்கனவே 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். கண்ணுக்குட்டி மட்டும் இன்றி அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதோடு, இனியொரு சம்பவம் இப்படி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
குடிப்பழக்கம் கிடையாது: கள்ளச்சாராய விற்பனை செய்து வந்த கண்ணுக்குட்டிக்கு குடிப்பழக்கம் கிடையாதாம். இதனால் தனது தம்பி மூலமாகவே மெத்தனாலை கண்ணுக்குட்டி வாங்கி வந்ததாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications