டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்.. கள்ளக்குறிச்சி வன்முறையை தொடர்ந்து புதிய அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி : வன்முறையில் சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பள்ளி மாணவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து, பள்ளி சூறையாடப்பட்டது. பேருந்துகள், தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்தப் பள்ளியில் ஆய்வு செய்து, வகுப்பறைகள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் வரும் ஞாயிறன்று நடக்கவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையம் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்துகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. குரூப் - 4 தேர்வு நாள் நெருங்கி வருவதால் அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது.

கள்ளக்குறிச்சி
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடந்த வன்முறையால் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையமாக உள்ள அந்தப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் ஆய்வு செய்து, வகுப்பறைகள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப் 4 தேர்வு
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு எதிர்வரும் ஜூலை 24ஆம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வினை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டங்களை மையங்களாகக் கொண்டு மொத்தம் 42,600 விண்ணப்பதாரர்கள் 143 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
Recommended Video

தேர்வு மையம் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் 3401-கள்ளக்குறிச்சி தேர்வு மையத்திற்குட்பட்ட தேர்வுக் கூடம் எண்:- 043, 044, 045, 046 - கனியாமூர், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத 1200 தேர்வர்களுக்கு தேர்வாணையத்தால் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறந்ததையடுத்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக தேர்வு நடத்துவதற்கான சூழல் இல்லாததால், மேற்படி 1200 தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு மையம் மாற்றப்படுகிறது.

நீலமங்கலம்
மாற்று இடமாக கள்ளக்குறிச்சி வட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 900 தேர்வர்கள் மற்றும் ஏ.கே.டி. நினைவு வித்யா சாகத் பள்ளி (சி.பி.எஸ்.இ)யில் 300 தேர்வர்கள் தேர்வு எழுத தேர்வறைகள் ஒதுக்கீடு செய்து புதிய ஹால்டிக்கெட் தேர்வாணையத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என குரூப் 4 தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications