ஜெ. வழக்கு... கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது: நடிகை ரோஜா
சென்னை: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா. இவர் அடிக்கடி தனது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்காக அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்து வருகிறார். அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகத்துக்கு இன்று காலை திடீரென சென்றார்.

அங்கு பொது மேலாளர் அசோக்சிங்காலை சந்தித்த ரோஜா, கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நகரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோல் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களையும் நகரியில் நிறுத்த வேண்டும்.
சென்னையில் இருந்து திருத்தணி வரை மின்சார ரயில் இயக்கப்படுகின்றன. அந்த ரயிலை புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்.
நகரில் உள்ள ரயில் நிலையங்கள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. அவற்றை சுத்தப்படுத்தி புதுப்பிக்க வேண்டும். பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் நடைபாதை மேம்பாலங்களும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அனுபவம் சர்மா, முதன்மை இயக்க அதிகாரி அனந்தராமன் போன்றோரையும் சந்தித்து மனு கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் நோஜா. அப்போது அவர் கூறியதாவது:-
ஐந்தாவது முறை முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. சொத்துக்குவிப்பு விவகாரத்தில் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தற்போது அவ்வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு இருக்கிறார். கர்நாடக அரசு இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது' என்றார்.


Click it and Unblock the Notifications
