For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னைத் திட்டுவதற்காவது அக்கறை காட்டுகிறாரே ஓ.பன்னீர்செல்வம்... கருணாநிதி பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை நடத்தவேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதிகளும், உச்ச நீதி மன்ற நீதிபதிகளும் உத்தரவிட்ட பின்னரும், அதனை ஏற்று நடைமுறைப்படுத்திட இவ்வளவு கால தாமதம் ஏன் என தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

மேலும், எதற்காகவும் வாயைத் திறக்காத இந்நாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னைத் திட்டுவதற்காவது அக்கறை காட்டுகிறாரே என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னைத் திட்ட மட்டும் அக்கறை..

என்னைத் திட்ட மட்டும் அக்கறை..

எதற்கும் வாயைத் திறக்காத இந்நாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சரைச் சந்தித்த போது வாங்கிக் கட்டிக் கொண்ட காரணத்தாலோ என்னவோ, என்னைத் திட்டி அறிக்கை விடுவதில் மட்டும் அக்கறை காட்டி வருகிறார். ஏடுகள் பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு "கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்" என்று தலைப்பிட்டிருக்கின்றன.

உண்மை தான்...

உண்மை தான்...

உண்மை தான். முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்? அந்த முறைகேட்டில் என்னென்ன தவறுகள் நடந்தன - எப்படிப்பட்ட பரிமாற்றங்கள் நடந்தன என்பதை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரத் தானே, உயர் நீதி மன்ற நீதிபதிகள், சகாயம், ஐ.ஏ.எஸ்., அவர்களின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அவர் அந்த முறைகேடுகள் பற்றிய அறிக்கையை நீதி மன்றத்திற்குக் கொடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

எனக்குப் பதில் சொல்கிறார்...

எனக்குப் பதில் சொல்கிறார்...

தீர்ப்பு கொடுத்தது உயர் நீதி மன்ற நீதிபதி! எனவே பதிலளிக்க வேண்டியது அங்கே தான். ஆனால் பன்னீரோ எனக்குப் பதில் சொல்லியிருக்கிறார். சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, அ.தி.மு.க. அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கே என்ன சொன்னார்கள்? சகாயம் விசாரணைக் கமிஷன் விரைவில் நடைபெற வேண்டுமென்று உயர் நீதி மன்றம் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள். அந்தத் தீர்ப்புக்குக் காரணம் யார்? உயர் நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, சகாயம் கமிஷனை இயங்க விட்டிருந்தால், உச்ச நீதி மன்றத்தில் தலைகுனிந்து ‘குட்டு' வாங்கியிருக்க வேண்டாம் அல்லவா?

ஆப்பசைத்த குரங்கு...

ஆப்பசைத்த குரங்கு...

உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகாவது, அ.தி.மு.க. அரசு, சகாயம் விசாரணைக் கமிஷனை நடத்தவிட்டிருக்கலாம் அல்லவா? அதற்குப் பிறகும் உயர் நீதி மன்றத்திலே அ.தி.மு.க. அரசு தானே சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதிலே தான் உயர் நீதி மன்றநீதிபதிகள், சகாயம் கமிஷன் விசாரணையை நான்கு நாட்களில் அமைத்து ஆணையிட வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, தமிழகஅரசுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்களே? அது அரசுக்குப் பெருமை தருகின்ற செயலா? இந்த நிலை யாரால் ஏற்பட்டது? என்னாலா ஏற்பட்டது? இத்தகைய நெருக்கடி வளையத்திற்குள் சிக்கிக் கொண்ட பிறகு, "ஆப்பசைத்த குரங்கின்" நிலைமைக்கு ஆளான பன்னீர் அரசு வேறு வழியின்றி இறங்கி வந்திருக்கிறது. அதுவும் நான்கு நாட்கள் அலட்சியமாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் நேற்றையதினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், கனிம வளத்துறை தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் "உயர் நீதி மன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணைக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளதாம். இது இன்று காலையில் ஒரு நாளேட்டில் மட்டும் செய்தியாக வந்துள்ளது.

வெட்கக்கேடான நிலை...

வெட்கக்கேடான நிலை...

சகாயம் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்த போதே, அதிமுக அரசு நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி, நேற்று வெளியிட்ட உத்தரவை அப்போதே வெளியிட்டிருந்தால், நீதி மன்றத்தின் கண்டனத்திற்கும், அபராதத்திற்கும் ஆளாகி வெட்கக் கேடான ஒரு நிலையை உருவாக்கி இருக்க வேண்டாமல்லவா? இதைத் தான் நான் என் அறிக்கையில் கேட்டிருந்தேன். அதற்கு என்னை வசைபாடி, எதற்கும் வாய் திறக்காத பன்னீர் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

‘அம்மா’ கதை...

‘அம்மா’ கதை...

ஆனால், முதலமைச்சர் பன்னீர்செல்வம் செயல்படவில்லை என்றும், வாயே திறப்ப தில்லை என்றும் முதலமைச்சர் என்று தன்னை அழைத்துக் கொள்ளவே வெட்கப்படுகிறார் என்றும், மக்கள் மத்தியிலே பரவலாக ஒரு புகார் உள்ளது. ஊரிலே கூட ஒரு குழந்தை பேசுவதற்கான வயது வந்த பின்னரும் பேசவே இல்லையே என்று அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, கடைசியில் ஒரு நாள் அந்தக் குழந்தை வாய் திறந்து முதல் முறையாகப் பேசியதாம். என்ன பேசியது தெரியுமா? அந்தக் குழந்தை தன் தாயைப் பார்த்து, "அம்மா, நீ எப்போது உன் கழுத்திலே இருக்கும் தாலியை அறுக்கப் போகிறாய்?" என்று கேட்டதாம். அந்தக் குழந்தையைப் போல, நம்முடைய முதலமைச்சர் வாயே திறக்காமல் இருந்துவிட்டு , இறுதியாக அந்த "அம்மா"வுக்குப் பயந்து கொண்டு, என் மீது இந்த "அம்மா"வைப் போலவே அறிக்கை கணை தொடுத்து வருகிறார்.

பினாமி ஆட்சி... பொம்மை முதல்வர்

பினாமி ஆட்சி... பொம்மை முதல்வர்

முந்தைய "மைனாரிட்டி" தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கிரானைட் முறைகேடு மறைக்கப்பட்டு விட்டதாக "பினாமி" ஆட்சி நடத்தும் பொம்மை முதல்வர் பன்னீர் தனது அறிக்கையிலே பிதற்றியிருக்கிறார். கழக ஆட்சிக் காலத்தில் நான் முறைகேட்டினை மறைத்தேன் என்றால், அப்போது பன்னீர் எங்கே போனார்? நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருக்க வேண்டியது தானே? கழக ஆட்சிக் காலத்தில் எந்த நீதி மன்றமாவது, கிரானைட் முறைகேடு குறித்து, யார் தலைமையிலாவது விசாரணை நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டு, அதனை நான் ஏற்காமல் இருந்து விட்டேனா? அப்படி இருந்தால் பன்னீர் எடுத்துக் காட்டி யிருக்க வேண்டியது தானே?

அவதூறு வழக்குகள்...

அவதூறு வழக்குகள்...

கிரானைட் முறைகேடு பற்றி எழுதிய நாளேடு ஒன்றின் மீது; கழக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியிருப்பதோடு, அவரே அந்த அறிக்கையில் அந்த வழக்கு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்று அ.தி.மு.க. ஆட்சியில் கருத்துரிமையின் கழுத்தை நெரித்திடும் வகையில் எத்தனை பத்திரிகைகள் மீது அடுக்கடுக்காக அவதூறு வழக்குகள்? ஒப்பிட்டுப் பார்க்கப் பன்னீர் தயாரா?

அவரையும் அறியாமல்...

அவரையும் அறியாமல்...

கழக ஆட்சியில் அந்தப் பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா? அதையும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது அறிக்கையில், "அவரையும் அறியாமல்" தெரிவித்திருக்கிறார். என்ன நடவடிக்கை தெரியுமா?

விசாரணை அறிக்கை...

விசாரணை அறிக்கை...

"பத்திரிகைச் செய்தி குறித்து 30-7-2010 அன்றே, இரண்டே நாட்களில், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் அரசுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், "26-7-2010 நாளிட்ட செய்தித் தாளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் காணவில்லை என கற்பனையாக வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும், அரசுக்கு கிரானைட் குவாரிகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெறும் நிலையிலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வரும் நிலையிலும், செய்தித் தாளில் பொய்யான செய்திகள் வெளியிட்டு தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் மேற்படி செய்தித் தாளில் வரும் செய்திகளை நிராகரிக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாகப் பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலேயே வெளிப்படுத்தி யிருக்கிறார். எனவே கழக ஆட்சியில் இப்படியொரு செய்தி ஒரே ஏட்டில் வந்த பிறகும், அதைப்பற்றி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விசாரணை அறிக்கை பெற்றது என்ற உண்மை வெளிப்படுகிறதா அல்லவா?

சான்றிதழ்...

சான்றிதழ்...

மாவட்ட ஆட்சித் தலைவர் இவ்வாறு அனுப்பிய அறிக்கைக்கும் மாசு கற்பிக்கும் வகையில், இந்த அறிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் உண்மையில் விசாரணை நடத்தித் தந்ததா என்ற ஐயத்தையும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே எழுப்பியிருக்கிறார். கழக ஆட்சிக் காலத்தில், ஒரு பத்திரிகையில் அவதூறான செய்தி வந்ததும், மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து இரண்டே நாட்களில் அறிக்கை பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தது? 2011ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர், கிரானைட் முறைகேடு பற்றிய அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டார் என்றும், அதற்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் 19-5-2012 அனுப்பினார் என்றும் பன்னீர்செல்வம் அறிக்கையிலேயே தெரிவித்திருக்கிறார். அதாவது 2011ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஜெயலலிதாஅறிக்கை கேட்டதற்கு, ஓராண்டு கழித்து 2012ஆம் ஆண்டு மே மாதம் தான் மாவட்ட ஆட்சித் தலைவர், அ.தி.மு.க. ஆட்சியிலே அறிக்கை அனுப்பினார் என்று பன்னீர்செல்வமே ஜெயலலிதா ஆட்சிக்குச் "சான்றிதழ்" கொடுத்திருப்பதும் அவருடைய அறிக்கையிலே தெளிவாகிறது.

காலதாமதம் ஏன்..?

காலதாமதம் ஏன்..?

கிரானைட் முறைகேட்டினைச் சட்டப் பூர்வமாகத் தகர்த்தெறியத்தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் ஜெயலலிதா எடுத்தார் என்றும் தன் அறிக்கையில் பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். அப்படி நடவடிக்கை எடுத்தது உண்மையானால், நேர்மையான அதிகாரி சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை நடத்தவேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதிகளும், உச்ச நீதி மன்ற நீதிபதிகளும் உத்தரவிட்ட பின்னரும், அதனை ஏற்று நடைமுறைப்படுத்திட இவ்வளவு கால தாமதம் ஏன்? இதுதான் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்ததற்கான அடையாளமா?

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has questioned Chief minister O.Panneerselvam that Why he is delaying to form the investigating committee headed by IAS officer Sagayam even after High court's ordertamilnadu, dmk, karunanidhi, admk, jayalalitha, o.panneerselvam, sagayam, தமிழ்நாடு, திமுக, கருணாநிதி, அதிமுக, ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், கிரானைட் முறைகேடு, சகாயம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X