செய்வதைத் திருந்தச் செய்... தீவிரவாதிகளைப் பிடித்த போலீஸாருக்கு பதவி உயர்வு.. கருணாநிதி அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: "செய்வதைத் திருந்தச் செய்" என்ற முதுமொழியை நினைவிலே கொண்டு, தமிழகக் காவல் துறை செயல்பட வேண்டும். தீவிரவாதிகளைப் பிடிக்க உண்மையில் பாடுபட்ட காவல் துறையினரின் மனம் புண்படாத அளவிற்கு, அவர்களுக்கும் உரிய விருதினை உடனடியாக வழங்குவதே செய்த தவறைத் திருத்திக் கொள்வதற்கான வழிமுறையாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை...

கேள்வி: பயங்கரவாதிகளைப் பிடித்த போலீசாருக்குச் சிறப்பு பரிசும், பதவி உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறதே?

பதில்: கடமையை ஆற்றிய காவல் துறை நண்பர்களுக்கு பரிசளிப்பதும், பாராட்டு வதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு சிறப்புப் பரிசும், பதவி உயர்வும் வழங்கப்பட்டபோது, அதிலே நடை பெற்ற தவறுகளைப் பற்றி இன்றளவும் வழக்குகளும், குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது இந்த முயற்சியில் பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரகுமார் என்பவர், போலீஸ் பக்ருதீன் என்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்து, இருவரும் கட்டி உருண்டு சண்டையிட்டு, அதன் பின் பக்ருதீனை வீரகுமார் மடக்கிப் பிடித்ததாகவும், அதற்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரே வீரகுமாரை அழைத்துப் பாராட்டிய தாகவும், ஆனால் பதவி உயர்வு மற்றும் பரிசுப் பட்டியலில் வீரகுமார் பெயர் இடம் பெறவில்லை என்றும் செய்தி வந்துள்ளது.

அரசின் சார்பில் இத்தகைய பரிசுகளை அளிக்கும்போது சம்பவத்தில் ஈடுபடாதவர்களையும் பட்டியலில் சேர்க்கக் கூடாது; சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் சேர்க்காமல் விட்டுவிடக் கூடாது. பரிசுப் பட்டியலில் விடப்பட்ட இன்ஸ்பெக்டர் வீரகுமாரின் புகைப்படத்துடன் அரைப் பக்கத்திற்கு செய்தி வெளியிட்டுள்ளது ஒரு நாளிதழ்.

அந்த செய்தியின் தலைப்பே, முதலமைச்சர் அறிவித்துள்ள பரிசுகளில் தங்கள் பெயர்கள் விடப்பட்டதாக சில காவல் துறையினரிடம் மனக்கசப்பு - தேடப்பட்டவரைப் பிடிக்க உதவியாக இருந்த மாநகர போலீசைச் சேர்ந்தவர் புறக்கணிக்கப்பட்டார் என்றே தலைப்பிட்டிருக்கிறார்கள். அதற்குக் கீழே இவரது பெயர் விடப்பட்டது பற்றி விரிவாகச் செய்தி அரைப் பக்கத்திற்கு வந்துள்ளது.

இந்தச் செய்திக்குப் பிறகாவது காவல் துறை அதிகாரிகள் உண்மையை உணர்ந்து, வீரகுமாருக்கும், அவரைப் போலவே வேறு யாராவது விடப்பட்டிருந்தால் அவர்களுக்கும் உடனடியாக இதற்கான பரிசுகளை வழங்குவது தான் பொருத்தமாக இருக்கும்.

மேலும் முதலமைச்சரின் அறிவிப்பு எத்தகைய வரவேற்பை மதுரையிலே பெற்றுள்ளது என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அதற்குத் தலைப்பு "Heartburn in Madurai too" என்பதாகும். அந்தச் செய்தியில், "Chief Minister Jayalalithaa's announcement of cash reward and one step promotion to 20 police officers and police personnel involved in the arrest of
suspected extremists has caused heartburn among the rank and file in the
department who had been in special teams that nabbed the suspects now and in the past" என்று தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது, முதலமைச்சர் ஜெயலலிதா பரிசும், பதவி உயர்வும் 20 காவல் துறையினருக்கு அளிக்கும் அறிவிப்பு அந்தத் துறையிலே உள்ள, கடந்த காலத்தில் தனிப்பிரிவிலே பணியாற்றிய ஒட்டுமொத்தமானவர்களுக்கும் நெஞ்செரிச் சலை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் ஒருவர், எங்களைச் சேர்ந்த சிலருக்குப் பரிசு அளிப்பதை நாங்கள் வரவேற்ற போதிலும், தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக நாள் முழுவதும் பணியாற்றிய எங்களைப் போன்றவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

எஸ்.ஐ.சி., எஸ்.ஐ.டி., மற்றும் எஸ்.ஐ.யு. ஆகியவற்றில் பணியாற்றும் காவலர்கள் கடந்த காலத்தில் இந்த விசாரணைக்காகப் பெரிதும் பணியாற்றிய எங்களின் பணி கவனிக்கப்படாமல் போய் விட்டது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் புலனாய்வுத் துறையில் பணியாற்றும் கே. மாரியப்பன், எம். விஜயபெருமாள் போன்றவர்கள் ஆற்றிய சிறப்பான பணிகளைக் குறிப்பிட்டு அவர்களுக்கெல்லாம் பரிசளிக்கப்படவில்லையே? என்று மனம் நொந்து கூறியவற்றை எல்லாம் அந்த நாளிதழ் தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

நான் ஏதோ இந்த அரசின் மீது புகார் கூற வேண்டுமென்பதற்காக, சொல்லவில்லை. நாளேடுகளே விளக்கமாக எழுதியிருக்கும் செய்தியைத்தான் ஆதாரமாகக் கொண்டு கூறுகிறேன். "செய்வதைத் திருந்தச் செய்" என்ற முதுமொழியை நினைவிலே கொண்டு, தமிழகக் காவல் துறை செயல்பட வேண்டும்.

உண்மையில் பாடுபட்ட காவல் துறையினரின் மனம் புண்படாத அளவிற்கு, அவர்களுக்கும் உரிய விருதினை உடனடியாக வழங்குவதே செய்த தவறைத் திருத்திக் கொள்வதற்கான வழிமுறையாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

கேள்வி: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள், அதன் துறைகள், நிறுவனங்கள் மற்றும் மையங்களில் 3 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே?

பதில்: அனைவரும் ஒருமுகமாக வரவேற்கவேண்டிய தீர்ப்பு இது. மாற்றுத் திறனாளிகள் பல்வேறு சமூகத் தடைகள் காரணமாக வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தீர்ப்பின் மூலமாக அவர்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்.

மத்திய, மாநில அரசுகள் தங்களது துறைகளில் உள்ள காலி இடங்கள் குறித்து விவரங்களைத் தொகுத்து அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 50 விழுக் காட்டி ற்கு மேல்இடஒதுக்கீடு போகக்கூடாது என்பதை ஒரு காரணமாகக் காட்டி, இதனை மறுக்கவோ, செயல்படுத்தாமல் நிராகரிக்கவோகூடாது. இதனை மத்திய, மாநில அரசுகள் மூன்று மாதக் காலத்திற்குள் நிறைவேற்றவேண்டும் என்ற தீர்ப்பினை வரவேற்கின்றேன். இந்தத் தீர்ப்பினை உடனடியாக நடைமுறைப் படுத்தவேண்டியது அரசுகளின் கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+