நல்லாட்சி மலர திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - கருணாநிதி
சென்னை: தமிழகத்தை 5 வருடமாக சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி நல்லாட்சி மலர திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையின் வேளச்சேரி, ஆலந்தூர், பல்லாவரம், மயிலாப்பூர் உள்ளிட்ட தெகுதிகளில் திமுக தலைவர் கருணாநிதி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். நேரமின்மை காரணமாக அவர் சில நிமிடங்கள் மட்டுமே வாக்காளர்களிடம் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார். அங்குள்ள டாக்டர் அம்பேத்கர் பாலத்தின் அருகில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியது: தமிழகத்தை சூழந்துள்ள இருள் விலகி, இனிமையான ஆட்சி மலர வேண்டும்.
மதச்சார்பற்ற கொள்கைகளை நிறைவேற்றி அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றி தமிழகத்தில் நல்ல ஆட்சி மலர வேண்டும். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து அவர்களை கை தூக்கிவிடுங்கள் என்று அவர் பேசினார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரத்தில் ஈடுபட்ட கருணாநிதி, தமிழகத்தை கடந்த 5 வருடங்களாக இருள் சூழ்ந்துள்ளதாகவும், அதனை அகற்ற இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்


Click it and Unblock the Notifications
