ஸ்டாலினின் ஜல்லிக்கட்டு உண்ணாவிரதம் ஒத்திவைப்பு- ஜன. 5 திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு
சென்னை: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் உறுதி மொழியை ஏற்று அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசைக் கண்டித்து ஜனவரி 5ம் தேதி சென்னையில் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் திமுகவினர் மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மக்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உறுதியளித்ததையடுத்து திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
நவம்பர் மாத இறுதியிலும், டிசம்பர் மாதத் தொடக்கத்திலும் தமிழகம் முழுவதும் பெய்த பெருமழை காரணமாகவும், அதனைத் தொடர்ந்து உரிய நேரத்தில் முறைப்படி செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்காமல் முன்னறிவிப்பின்றி ஒட்டுமொத்தமாகத் திடீரென்று மிக அதிக அளவில் தண்ணீரைத் திறந்து விட்ட காரணத்தால் ஏற்பட்ட செயற்கையாக வெள்ளத்தினாலும் சென்னை மாநகரமே நீரில் மூழ்கி, ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகி, இலட்சக்கணக்கானோர் வீடிழந்து, நாதியற்றவர்களாக உற்றார் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த நிலையில், அவ்வளவு பெரும் சேதத்திற்கும் காரணம் அ.தி.மு.க. அரசும், அதன் நிர்வாகக் கோளாறுகளும், தாமதமும் தான் என்று அனைத்துக் கட்சியினரும் குற்றஞ்சாட்டிய போது, அதுபற்றி தமிழக முதல் அமைச்சர் எவ்வித விளக்கமும் அளிக்க முன்வரவில்லை என்பதால், அந்த நாசத்திற்குக் காரணமானவர் யார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த, நீதி விசாரணை நடத்திட வேண்டுமென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி கூறிய போதிலும், அவ்வாறு நீதி விசாரணை இதுவரை உருவாக்கப்படாததைக் கண்டித்தும், வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில் பல இடங்களில் பல்வேறு முறைகேடுகள் ஆளுங்கட்சியினராலும், அரசினராலும் நடத்தப்படுவதைக் கண்டித்தும், சென்னை மாநகரில் வெள்ளம் ஏற்பட முழு முதல் காரணம் அ.தி.மு.க. அரசே என்பதை வலியுறுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் ஜனவரி 5ஆம் தேதியன்று சென்னை மாநகரில் என்னுடைய தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகளும் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பொங்கல் நாள், தமிழர் திருநாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி ஆண்டுதோறும் "ஜல்லிக்கட்டு - ஏறு தழுவல் - மஞ்சுவிரட்டு" என்ற பெயரில் தமிழக கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் பங்கேற்கும் வீர விளையாட்டு; பல ஆண்டு காலமாகச் சிறப்பாக நடைபெற்று வந்து, தற்போது தடுக்கப்பட்டு விட்டது பற்றியும் கழக நிர்வாகிகளின் கூட்டத்தில் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதி மன்றம் 7-5-2014 அன்று தீர்ப்பளித்ததோடு, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் உச்ச நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. கடந்த ஆண்டு இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 12-1-2015 அன்று அதுபற்றி நான் அறிக்கை விடுத்தேன். ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு வழி வகுக்க வேண்டிய அ.தி.மு.க. அரசோ கடந்த ஓராண்டு காலமாக இதைப் பற்றி வாய் திறக்காமல் செயலற்று இருந்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக் குழுவினர் என்னையும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினையும் 18-12-2015 அன்று நேரில் சந்தித்து பேசியதையொட்டி, அவர்களது வேண்டுகோளையும், உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையிலே உடனடியாகத் தலையிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி, மதுரை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 28-12-2015 அன்று ஜல்லிக்கட்டு விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வந்த அலங்காநல்லூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவும், அதிலே அனைத்துக் கட்சியினரும் பங்கு பெற வேண்டுமென்றும் 18-12-2015 அன்றே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசு எல்லாவற்றையும் போல, இந்தப் பிரச்சினையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையான அனுமதியைப் பெற்றுத் தரத் தவறி விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சி எடுப்பது போல, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லி, அறிக்கைகள் விட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற உண்மையான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்தப் பகுதி மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு, முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளு மன்றக் கூட்டத் தொடர் முடிகிற நாளன்று, பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். உண்மையிலேயே அதிலே அக்கறை இருந்திருந்தால், முன்கூட்டியே பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டாமா?
28-1-2015 அன்று அலங்காநல்லுரில் கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை வலியுறுத்தி, உண்ணாவிரதம் நடைபெறும் என்று 18-12-2015 அன்று செய்தியாளர்களிடம் கூறப்பட்ட பிறகு, 23ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

23-12-2015 அன்று மத்திய அமைச்சர், பொன். இராதாகிருஷ்ணன் தொலைக் காட்சிகளில் ஜல்லிக்கட்டு பற்றி அளித்த பேட்டியைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சருக்கு நான் எழுதிய அவசரக் கடிதத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு எவ்வித இடையூறுமின்றி நடைபெற பிரதமரைச் சந்தித்து தேவையான முயற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்தி யிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு அன்றிரவே பதில் எழுதிய மத்திய இணை அமைச்சர், "ஜல்லிக்கட்டை நடத்த தாங்கள் எடுத்த முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர்களின் பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து நான் முயன்று வருகிறேன். பிரகாஷ் ஜாவ்டேகர் தனது துறையைச் சார்ந்த அதிகாரி களை அழைத்து, ஜல்லிக்கட்டை நடத்த எந்த வழிமுறைகளைக் கையாளலாம் என்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். 23-12-2015 அன்று ஜல்லிக்கட்டு குழுத் தலைவர் ராஜசேகர் அவர்களோடு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அவர்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டை ஜனவரி 2016இல் தைப்பொங்கல் அன்று நடத்த அனுமதி வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி மாதம், தமிழர் திரு நாளாம் தைப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்திற்கும் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முழு ஆதரவு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவசரக் கடிதம் எழுதியதையும் இந்த நேரத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ள நிலையில் 28ம் தேதியன்று அலங்காநல்லூரில் நமது கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்து வதாக அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுகிறேன்.
ஜல்லிக் கட்டு விழாவினை நடத்த வேண்டு மென்று கோரி என்னைச் சந்தித்த குழுவினரும் மத்திய அரசின் இணைஅமைச்சர் தெரிவித்துள்ள நம்பிக்கையை ஏற்று, இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.''
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications