மாடி ஏற முடியவில்லை... செல்போனில் எஸ்.எஸ்.ஆர். உடலைப் பார்த்து கண் கலங்கிய கருணாநிதி!

உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி அஞ்சலி
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி, எல்டாம்ஸ் சாலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர். வீட்டிற்கு நேரில் சென்று, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இரங்கல் செய்தி
மேலும் எஸ்.எஸ். ஆர் மறைவுக்கு கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கொள்கை வீரராகவும், என் குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் விளங்கியவரும்; நான் ‘ராஜி', ‘ராஜி' என்று அன்பொழுக அழைத்து மகிழ்ந்தவருமான; என் உடன்பிறப்புகளில் ஒருவராம்; எஸ்.எஸ்.ஆர்.
மறைந்த நிகழ்ச்சி என் நெஞ்சை குலுக்கியது.
உருகும் வசனங்கள்
நான் எழுதிய திரைப்படங்கள் "பராசக்தி", "மனோகரா", "பூம்புகார்", "மறக்கமுடியுமா", "ரங்கூன் ராதா", "காஞ்சித் தலைவன்", "மணிமகுடம்"போன்றவற்றில், எஸ்.எஸ்.ஆர். நடித்த காட்சிகளும் பேசிய உரையாடல்களும் இன்றளவும் நினைத்து நினைத்து உருகிடக் கூடியவை.
நம்பமுடியவில்லை
என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் துணை நின்று, ஒரு பகுத்தறிவாளனாக, ஒரு கழகக் காளையாக விளங்கிய அவரை இழந்துவிட்ட செய்தியை இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை.
ஆழ்ந்த துயரம்
நெருங்கிய நண்பராக, கழகத்தில் அண்ணாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவராக, கலையுலகத்தினருக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அன்புச் செல்வமாம் எஸ்.எஸ்.ஆர். அவர்களை இழந்துவிட்டதற்கு கலையுலகத்தின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் ஆழ்ந்த துயரத்தை அறிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் கருணாநிதி கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து
எஸ்.எஸ்.ஆர் உடலுக்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், நடிகை சச்சு, எழுத்தாளர் வைரமுத்து, உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
செல்போனில் அஞ்சலி:
எஸ் .எஸ்.ஆர். உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டிற்கு நேரில் சென்றார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், எஸ்.எஸ்.ஆர். உடல் இரண்டாவது மாடியில் வைக்கப் பட்டிருந்ததால், கருணாநிதியால் மாடி ஏறிச் செல்ல இயலவில்லை.
இதனால் கொண்டு வந்திருந்த மாலையை தனது கைகளால் கருணாநிதி தொட்டுக் கொடுத்தார். பின்னர், செல்போனில் எஸ்.எஸ்.ஆரின் உடலைப் படம்பிடித்துக் கொண்டு வந்து கருணாநிதியிடம் காட்டினர்.












Click it and Unblock the Notifications