For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சினைக்கு தீர்வு... மோடிக்கு கடிதம் எழுதினால் போதுமா? ஜெ.க்கு கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பிரச்சனையில் தீர்வு காணுவதற்கு பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதினால் போதுமா? என தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு இன்னும் திறந்து விட வேண்டிய 27.557 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டுமென்று கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கம் போலவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதி யிருக்கிறார்.

Karunanidhi questions Jayalalithaa in cauveri issue

நடுவர் மன்ற உத்தரவின்படி உரிய நேரத்தில் கர்நாடக நீர் கிடைக்காததாலும், அதனைத் தகுந்த நேரத்தில் தமிழக அரசு கேட்டுப் பெற்றுத் தராத காரணத்தாலும், இந்த ஆண்டும் ஜுன் 12ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்காமல், கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இப்போது கூட காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3ஆம் தேதி 90.05 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், நேற்று 87.15 அடியாக சரிந்தது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2.90 அடி சரிந்துள்ளது.

வேதாரண்யம் கடைமடைப் பாசனப் பகுதிக்குக் காவிரி நீர் இன்னும் வந்து சேராததால் நேரடியாக விதைக்கப்பட்ட சம்பா நெற்பயிர் கருகி வருவதாகவும், ஒரு போகச் சம்பா சாகுபடி கூடச் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் மீள முடியாத அளவுக்கு வேதனையில் உள்ளதாகவும் அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பி.ஆர்.பாண்டியன் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்றாண்டுகளாகக் குறுவை விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்டார்கள் என்பது விவரித்திட இயலாத சோகமாகும்.

இதற்கிடையே கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு. எம்.பி. பாட்டீல் கூறும்போது, கடந்த புதன்கிழமை வரை நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் திறக்க வேண்டிய தண்ணீர் குறைவில்லாமல் திறக்கப்பட்டது என்றும், இந்த ஆண்டு தமிழக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேட்கவில்லை என்றும், இருந்தாலும் கர்நாடக மாநிலம், நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதற்காகத் தண்ணீர் திறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அவருடைய இந்தக் கருத்தின் வாயிலாக தமிழக அரசு தண்ணீர் திறக்க வேண்டு மென்று கேட்கவே இல்லை என்பது தெளிவாகிறது. விவசாயிகளுக்கு அத்தியாவசியத் தேவையான தண்ணீரைக் கூட வேண்டுமென்று கர்நாடக அரசிடம் கோரிக்கை வைக்காத அளவுக்குத் தான் தமிழக அரசு நடந்து கொhள்கிறது என்பது தமிழக மக்களுக்குக் கெட்ட வாய்ப்பாகும். நமது அண்டை மாநிலமான கர்நாடக அரசிடம் நமது விவசாயத்திற்குத் அடிப்படையான தண்ணீரைத் தாருங்கள் என்று கேட்காமல், எதற்கெடுத்தாலும் பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, அதை நாளேடுகளில் வெளியிடச் செய்து விளம்பரம் தேடிக் கொண்டு விட்டால், விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா?

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அனைத்துக் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அந்த மாநில அரசே கர்நாடகத்திலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லியிலே உள்ள கர்நாடக அமைச்சர்களையும் அந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து மாநிலத் தேவைகளுக்காக ஒருமித்த குரல் கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலே உள்ள அ.தி.மு.க. அரசு இங்கேயுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டம் கூட நடத்தவில்லை என்பது வெட்கக் கேடு மட்டுமல்ல; மனவேதனையைப் பெருக்கிடும் நிகழ்வுமாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், பா.ஜ.க. தலைவர்களின் ஒருவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அவர்கள் கூறும்போது, "கர்நாடகாவில் காவிரி டெல்டா பகுதியில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால் நான்கு அணைகளும் நிரம்பவில்லை; இதனால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

இரு மாநில விவசாயிகளின் நிலைமையைக் கருத்திலே கொண்டு கர்நாடக முதல்வரான சித்தராமையாவும், தமிழக முதல் அமைச்சரும் கலந்து பேசிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, இரு மாநில நட்புறவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் நேரடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது." என்றெல்லாம் தெரிவித்து, ஜெகதீஷ் ஷெட்டருடைய கருத்து ஏடுகளிலே வெளி வந்துள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, "கர்நாடகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது கடும் வறட்சி நிலவுகிறது. இது போன்ற வறட்சி காலத்தில் தண்ணீர்ப் பங்கீட்டு பிரச்சினை எழும்போது இரு மாநிலங்களும் சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று தீர்ப்பாய உத்தரவில் கூறப்பட்டுள்ளது" என்று சொல்லியிருக்கிறார்.

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளில் நேற்றைய நிலவரப்படி 74.23 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது எனத் தெரிகிறது. போதிய அளவு மழை பெய்யாத காலங்களில் நடுவர் மன்றம் வகுத்துத் தந்த இடர்ப்பாட்டுக்கால நீர்ப் பகிர்வு முறைப்படி இருக்கும் நீரைப் பகிர்ந்து கொள்வது தான் சட்டப்படி சரியான அணுகுமுறை என்பதைத் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்து உடனடியாகத் தெரிவித்து சம்பாப் பயிரையாவது காப்பாற்றுவதற்குத் தண்ணீரைப் பெற்றிடத் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.

மேலும் தமிழகச் சட்டப் பேரவையின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற - மாநிலங்களவை உறுப்பினர்களையும் டெல்லியில் உள்ள தமிழக அமைச்சர்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்தித்து ஏகோபித்த முறையில் அரசியல் அழுத்தம் தந்து, விவசாயிகளுக்குத் தண்ணீர் பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை இனியும் தாமதிக்காமல் அமைத்திடவும், மேகதாது அணைப் பிரச்சினையின் கடும் விளைவுகளை எடுத்தியம்பிடவும் முனைப்பான முயற்சிகளிலே ஈடுபாடு காட்ட வேண்டுமேயன்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதுவதால் காரியம் முடிந்து விடும் என்று கருதி வாளாவிருந்திடக் கூடாது!

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has questioned Chief minister Jayalaithaa on cauveri issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X