விஜயகாந்துக்கு வைகோ அல்வா கொடுத்துவிட்டார்: பண்ருட்டி ராமச்சந்திரன்
மதுரை: கருணாநிதியை அரசியலில் இருந்து விரட்ட அவரது பிள்ளைகளே போதும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன் பிரச்சாரம் செய்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,

மதுரை
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிடித்த நகரம் மதுரை. அவர் உலக தமிழ் மாநாட்டை இங்கு நடத்தி மதுரைக்கு பெருமை சேர்த்தார். அவரைத் தொடர்ந்து புரட்சி தலைவியும் மதுரையை வளமான பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதிமுக வரலாற்றில் மதுரைக்கு தனி சிறப்பு உள்ளது.

விஜயகாந்த்
இங்கு விஜயகாந்த் பற்றி பேசியே ஆக வேண்டும். அவருக்கு ஒரு இயக்கத்தை நடத்தும் தகுதி இல்லை. அவருக்கு வைகோ நெல்லை அல்வாவை கொடுத்துவிட்டார். வைகோ அரசியலில் அல்வா கொடுத்து விஜயகாந்தை அனுப்பி வைத்துள்ளார்.

தேமுதிக
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேமுதிக என்ற கட்சியே இருக்காது. சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைக்க அதிமுக தொண்டர்களின் கடும் உழைப்பு தான் காரணம். 2011ம் ஆண்டில் உச்சத்திற்கு சென்ற தேமுதிக 2014ம் ஆண்டு தேர்தலில் கீழே விழுந்துவிடும்.

ஜெயலலிதா
தமிழக அரசியலில் பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். வழியில் புதிய நிலைப்பாட்டை ஏற்படுத்தி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் புரட்சித் தலைவி. வரும் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்று பெறுவது உறுதியாகிவிட்டது.

பாஜக
ஜெயலலிதா பிரச்சாரத்தின்போது பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்டவர்களுக்கு நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் விடை கிடைத்திருக்கும்.

காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பாஜக பல இடங்களை கைப்பற்றினாலும் பெரும்பான்மை இருக்காது.

கருணாநிதி
கருணாநிதி திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். உள்பட பல தலைவர்களை வெளியேற்றியினார். ஆனால் அவரை அரசியலில் இருந்து விரட்ட அவரது பிள்ளைகளே போதும் என்றார்.












Click it and Unblock the Notifications