சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவு- கருணாநிதி கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழி வெறி - கலாச்சார வெறி அடிப்படையிலான மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கைகள் நாட்டை வளர்ச்சிப் பாதையிலிருந்து தடம் புரளச் செய்வதோடு, இந்திய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி பேரபாயத்தையும் ஏற்படுத்தி விடும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, "பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்காக வேதங்களுக்கு என்று வேதிக் போர்டு என்ற தனிப் பிரிவு ஜுன் 16ஆம் தேதி துவங்கப்படும். நமது கலாச்சாரம் என்பது வேதங்களில் ஊறியுள்ளது. வேதங்களைப் பயிலாமல் நமது கலாச்சாரத்தை நாம் முன்னிறுத்த முடியாது. ஆகவே மத்திய அரசுப் பள்ளிகளில் இந்த

ஆண்டு முதல் வேதப் பாடங்கள் பயில சிறப்பு வேத பாட போதனை பிரிவு (வேதிக் போர்டு) ஒன்று உருவாக்கப்படும். இந்த வேதப் பாடப் போதனைப் பிரிவுக்கு வேதாஞ்சலி என்று பெயர் வைக்கப்படும்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

பாஜக-வின் இந்துத்வா கொள்கை

பாஜக-வின் இந்துத்வா கொள்கை

பா.ஜ.க. அரசு 2014ஆம் ஆண்டில் அமைந்ததற்குப் பிறகு, அடிப்படை வாதமான இந்துத்வாவினை எய்துவதற்கு உகந்த பாதையாக சமஸ்கிருத மொழியைத் திணிப்பதில் வேண்டுமென்றே பிடிவாதமாக இருக்கிறது. மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும், அவர்களுக்குத் துணையாக சில அதிகாரிகளும் இணைந்து சமஸ்கிருத மொழித் திணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தும் மொழியாக சமஸ்கிருதம் இருந்து வருவதை அனைவரும் அறிவர்.

3வது மொழிப்பாடம்

3வது மொழிப்பாடம்

சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகளில் ஒன்றாக, இந்தியா முழுவதும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. மற்றும் அய்.சி.எஸ்.இ. போன்ற கல்விக் கூடங்களில் வரும் கல்வியாண்டு முதல் (2016-2017), சமஸ்கிருதம் மூன்றாம் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர விட்டது. டெல்லியில் இதே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்திருக்கிறார்கள். அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, "ஆங்கில மொழி மற்றும் மாநில மொழிகள் (தாய்மொழி) மாணவர்களுக்குத் தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதம் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும். தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிப் பாடங்கள்

கற்பிக்கப்பட்டு வருகின்றன. கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 3ஆவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். ஆகவே வரும் கல்வியாண்டு முதல் (2016-2017) மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும். மேலும் வரும் ஆண்டுகளில் 8ஆம் வகுப்புக்கு மேல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிலிருந்து, முதலில் வடமொழித் திணிப்பு, அடுத்து கலாச்சாரத் திணிப்பு தொடர்ந்து இந்தியாவில் அரங்கேற உள்ளன என்ற நோக்கம் வெளிப்பட்டது.

ஐநா-வில் ஹிந்தி

ஐநா-வில் ஹிந்தி

இதே மத்திய அமைச்சர், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தி மொழியை அறிவிப்பதற்காக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டப் போவதாக ஒருமுறை தெரிவித்தார். ஐ.நா. சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக, ஹிந்தியை அறிவிக்க, 129 நாடுகளின் ஆதரவு தேவை. அந்த 129 நாடுகளின் ஆதரவைத் திரட்ட, இந்தியா முயற்சித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் கூறினார். ஐ.நா. வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற்காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்பதாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் சுஷ்மா அறிவித்தார். மேலும் அவர், "ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் ஐ.நா. அலுவல் மொழியாக ஹிந்தியை அறிவிப்பது எளிதாகிவிடும்"என்றார்.

அனைத்து மொழிகளும் சமம்

அனைத்து மொழிகளும் சமம்

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்களைக் கொண்ட மக்கள் வாழும் நம் நாட்டில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சமமாகக் கருதப்பட வேண்டும்; அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்கப்படவேண்டும். அப்போதுதான் நாட்டின் கூட்டாட்சி வலுப்பெற்று, அனைவருக்குமான குடியரசு என்பது உறுதி பெறும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும், அதாவது அரசியல் சட்டத்தின் எட்டாவது

அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளையும் மத்தியில் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்ற நமது அரை நூற்றாண்டு காலக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசு, ஹிந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதுதான் சம நீதியா?

மொழி வெறி - கலாச்சார வெறி

மொழி வெறி - கலாச்சார வெறி

பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு ஹிந்தி மொழி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் திடீர் வேகம் காட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழி அகற்றப்பட்டு, சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது. சமஸ்கிருத வாரம், இந்தி வாரங்கள் தாராளமாகக் கொண்டாடப்படுகின்றன. வழக்கொழிந்துபோன சமஸ்கிருத மொழியில் சிறப்புச் செய்திகள் வாசிக்க அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. மொழி வெறி - கலாச்சார வெறி அடிப்படையிலான இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகள் நாட்டை வளர்ச்சிப் பாதையிலிருந்து தடம் புரளச் செய்வதோடு, இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிச் சிதைத்திடும்

பேரபாயத்தையும் ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கிறேன்! என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+