ஜெ. வழக்கு: அன்பழகனுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்ற எண்ணம் பொதுவானவர்களுக்கு வராமல் போகாது - கருணாநிதி
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வாதம் செய்வதற்கு அனுமதி மறுத்தது ஏன் என்ற எண்ணம் பொதுவானவர்களுக்கு வராமல் போகாது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனுதாரர்களில் ஒருவரான பேராசிரியரின் வழக்கறிஞரின் வாதத்தையே நேரில் கேட்காமல், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தால் போதுமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி:- பொதுவாக நீதிபதிகள் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால், அதனை மறுத்துக் கருத்துச் சொல்வது சரியல்ல. அதுவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு மாறாக அல்ல; சில கருத்துகள், எண்ணங்கள் நம் மனதைப் பாதிக்கும்போது, அதை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது தவறல்ல. சுமார் பதினெட்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களிலும் இழுத் தடிக்கப்பட்டு, காலம் கடத்தப்பட்டு வந்த வழக்கு இது. தற்போது தேர்தல் நெருங்குகிறது என்பதைத் தவிர, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டிய அவசரம் என்ன வந்து விட்டது?
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் தரப்பிலான வாதங் களைக் கேட்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டதாக 1-4-2016 தேதிய நாளேடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படாத விஷயங்கள் இருந்தால், அதை மட்டும் பேராசிரியர் தரப்பு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தால் போதுமானது என்று நீதிபதிகள் கூறியிருக் கிறார்கள். அதற்குக் காரணமாக நீதிபதிகள் சொன்னது என்ன தெரியுமா?
வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டியிருப்பதால் ஏற்கனவே கேட்ட வாதங்களையே திரும்பக் கேட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான வழக்கில், கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வி. ஆச்சார்யா ஆகியோரின் இறுதி வாதமும், சுப்பிரமணிய சாமியின் இறுதி வாதமும் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வழக்கில் மற்றொரு மனுதாரரான தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா தனது வாதத்தை முன் வைக்க மனு செய் திருந்த நிலையில், "அன்பழகன் தரப்பில் வாதங்களை முன் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை" என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபணை தெரிவித்ததை ஏற்று, நீதிபதிகள் இந்த வழக்கில் அன்பழகன் தரப்பை மூன்றாம் தரப்பாகச் சேர்க்க என்ன முகாந்திரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்குப் பதிலளித்த, பேராசிரியரின் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, "கடந்த 2004ஆம் ஆண்டு எங்களது கோரிக்கையை ஏற்றுத்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படிதான் வழக்கு கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வழக்கில் நாங்கள் மூன்றாம் தரப்பாகச் சேர்க்கப்பட்டோம்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் நாங்கள் மூன்றாம் தரப்பாக ஆஜராகி எழுத்துப்பூர்வமாக வாதங்களை முன் வைக்கவும், வாய்மொழியாக வாதிடவும்
அனுமதிக்கப்பட்டோம். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, எங்கள் வாதங்களை ஏற்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அதன் பின்னரும் இந்த வழக்கில் கர்நாடக தரப்பு வழக்கறிஞர், பவானி சிங்கின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றும் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டோம். எங்கள் வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் பவானி சிங்கை நீக்கியது" என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, "இந்த வழக்கில் கர்நாடக அரசும், சுப்பிரமணிய சாமி தரப்பும் பல்வேறு வாதங்களை முன் வைத்துள்ள நிலையில், நீங்கள் புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார்கள். பேராசிரியர் தரப்பில் என்ன வாதங்களை வைக்கப் போகிறார்கள் என்பதை கேட்காமலேயே நீதிபதிகளாகவே இவ்வாறு ஒரு முக்கிய வழக்கில் அனுமதியை மறுத்தது ஏன் என்ற எண்ணமும் பொதுவானவர்களுக்கு வராமல் போகாது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்ததே தவறு என உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் பர்மானந்த் கட்டாரா உச்ச நீதிமன்றத்திலே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருக்கிறார். அவ்வாறு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மனுவையும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
10-3-2016 அன்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பர்மானந்த் கட்டாரா உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடை மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 374 (2)ன்படி, ஓர் வழக்கில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கினால் தான், அந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முடியும். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த வழக்கில் திருத்த மனு (ரிவிஷன்)தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். மேல் முறையீடு செய்திருக்கக் கூடாது. எனவே இந்த வழக்கில் தவறாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications