மோடி என் நல்ல நண்பர்; மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டிய நடிகை குஷ்பு விருப்ப மனு எதையும் தாக்கல் செய்ததாக தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர் நாளிதழுக்கு திமுக தலைவர் கருணாநிதி சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அவர் பதிலளித்துள்ளார். கருணாநிதியின் பேட்டியிலிருந்து...

இலவசங்கள் இல்லாமல் சந்திப்பீர்களா

இலவசங்கள் இல்லாமல் சந்திப்பீர்களா

வரும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, இலவசங்கள், மானியங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லாமல் சந்திக்க, தி.மு.க., துணியுமா?

வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில், தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில், வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள, ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தினருக்குத் தேவையான இலவசங்கள் மற்றும் மானியங்களை வழங்குவது, தவிர்க்க முடியாதது.

தமிழகத்தில் சாத்தியம் இல்லையா

தமிழகத்தில் சாத்தியம் இல்லையா

குஜராத் மாநிலத்தில், இலவசங்கள் இல்லாமல் இவ்வளவு மனித வளமும், தொழில் வளமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதே... அது, தமிழகத்தில் சாத்தியம் இல்லையா?

குஜராத் மாநிலத்தின், மனித வளம் மற்றும் தொழில் வளம் குறித்து, கருத்து வேறுபாடுகள், தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை, தி.மு.க., ஆட்சி காலங்களில், நாங்கள் நிரூபித்திருக்கிறோம். இந்தியாவில், தி.மு.க., ஆட்சியில், மூன்றாவது இடத்தில் இருந்த, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, இன்றைக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், எந்த அளவுக்கு, கீழ் நோக்கி, கடைசி இடத்துக்கு சென்று விட்டது என்பதை, நீங்களே அறிவீர்கள்.

மோடி என் நல்ல நண்பர்

மோடி என் நல்ல நண்பர்

குஜராத் முதல்வர், மோடி குறித்து, உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?

மோடி, மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர் என்பதை, அவர் தொடர்ந்து மேற்கொண்டு இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் உணர்த்துகிறது. அவர், எனக்கு நல்ல நண்பரும் கூட.

பாஜக கூட்டணியில் சேருவீர்களா

பாஜக கூட்டணியில் சேருவீர்களா

திருச்சி மாநாட்டில், 'மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது' என, அறிவித்தீர்கள். அது, பா.ஜ., குறித்த அறிவிப்பா? தேர்தல் முடிந்த பின், பா.ஜ.,
கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறதா?

நான், மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்று, சொன்னது, உங்களுக்கு, பா.ஜ.க குறித்த அறிவிப்பாக தோன்றுகிறது என்றால், நீங்களே, அந்த கட்சி, மதவாத கட்சி என்று, ஒப்புதல் வாக்குமூலம் தருகிறீர்களா! லோக்சபா தேர்தலுக்கு பின், என்ன நிலை என்பதை, இப்போதே யூகித்து கூற முடியாது.

அம்மா உணவகங்கள்

அம்மா உணவகங்கள்

அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வரும், 'அம்மா' உணவகங்கள் போன்ற மலிவு விலை திட்டங்கள், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதா?

அரசின் மலிவு விலை திட்டங்கள், எந்த அளவுக்கு, மக்களை சென்று அடைகின்றன என்பதைப் பற்றியும், அந்த திட்டங்களில், நாள்தோறும் ஏற்பட்டு வரும் பிரச்னைகளைப் பற்றியும், 'தினமலர்' பத்திரிகையை தொடர்ந்து படித்தாலே, புரிந்து கொள்ளலாம். 26.12.14 அன்று, 'தினமலர்' நாளிதழில் வந்த செய்திப்படி, சப்பாத்தி செய்வதற்காக வாங்கிய இயந்திரங்களில், கோளாறு என்றும், அதற்கான ஒப்பந்தத்தையே, ரத்து செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அந்த திட்டங்கள், எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு, இது ஒரு உதாரணம்.

அதிமுகவை தனியாக எதிர்கொள்ள முடியுமா

அதிமுகவை தனியாக எதிர்கொள்ள முடியுமா

தே.மு.தி.க., மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல், அ.தி.மு.க.,வை, தேர்தலில், தி.மு.க.,வால் தனித்து எதிர்கொள்ள முடியுமா?

மூக்கைச் சொறிந்து விட முயற்சிக்கிறீர்கள்... அது உங்களால் முடியாது!

தமிழக முதலீடுகள்

தமிழக முதலீடுகள்

தமிழகத்தில் இருந்து முதலீடுகள், பிற மாநிலங்களுக்கு செல்லவில்லை என்று, தமிழக அரசு கூறி வருகிறதே?

கோவையில், கர்நாடக முதல்வர், முதலீட்டாளர்களை, அவருடைய மாநிலத்திற்கு வருமாறு, நேரில் அழைத்தது பற்றியும், கோவை வட்டார முதலீட்டாளர்கள், 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது பற்றியும், செய்தி வெளியிட்டீர்களே...

மின்சாரப் பற்றாக்குறை

மின்சாரப் பற்றாக்குறை

மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, இந்த அரசு, போதுமான நடவடிக்கை எடுத்துள்ளதா? தி.மு.க., ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மின்சார பற்றாக்குறைக்கு சமாதானம் சொல்வதற்கு, அ.தி.மு.க., ஆட்சியினர் எடுத்து வரும் நடவடிக்கைகளை போல, மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, இந்த அரசு போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது தான், உண்மை. ஆனால், நடவடிக்கை எடுப்பதாக, அவ்வப்போது, காலக்கெடு குறிப்பிட்டு, வாக்குறுதி வழங்கி வருகின்றனர். அந்த வாக்குறுதி எதையும், இதுவரை அவர்கள் காப்பாற்றவில்லை.

தி.மு.க., ஆட்சியில், மின்சார பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும், புதிய மின் திட்டங்களை தொடங்கினோம். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அந்த திட்டங்களில், அக்கறை காட்டாமல், தாமதம் செய்தனர். அதன்பின், அதிக அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், வேறு வழியின்றி, தி.மு.க., ஆட்சி திட்டங்களில் கவனம் செலுத்தினர்; அவற்றின் உற்பத்தி தான், தற்போது, ஆட்சியாளர்களை காப்பாற்றி வருகிறது.

அதிமுக ஆட்சிக்கு என்ன மதிப்பெண்

அதிமுக ஆட்சிக்கு என்ன மதிப்பெண்

தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து, என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ஆட்சி நிர்வாகம் குறித்து, உங்கள் மதிப்பெண் என்ன?

தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து, திருச்சி மாநாட்டில் விரிவாக சொல்லியிருக்கிறேன். கருத்து சுதந்திரம், பறி போய்விட்டது. அதிரடி அறிவிப்புகள், ஆடம்பர முழுப் பக்க விளம்பரங்கள், '110' அறிக்கைகள், நிர்வாக அலங்கோலங்கள், அச்சத்தின் பிடியில் பத்திரிகைகள், தமிழகத்தின் அனைத்து பிரிவினரிடமும் சளிப்பு, அ.தி.மு.க.,வினரிடம் மட்டுமே களிப்பு, ஆக்கப்பூர்வமான திட்டம் ஏதுமில்லை, வளர்ச்சி பணி சிறிதுமில்லை. நடப்பது எல்லாம், திராவிட இயக்க லட்சியங்களுக்கு எதிரான காரியங்கள், தி.மு.க., ஆட்சியில், சிந்தித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா; மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை; எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஏகடிய பேச்சு; அரசியல் தரத்தை தாழ்த்தி, அன்றாடம் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு, கேலிப் பேச்சு; ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சி தான், தமிழகத்தில் நடைபெறுகிறது. இங்கே நடைபெறுவது, ஆட்சி அல்ல; காட்சி; வெறும் காணொலி காட்சி. இவை தான், தற்போதைய ஆட்சி நிர்வாகம். இதற்கு, பள்ளிகளில் மாணவர்களுக்கு, சாதாரணமாக வழங்கப்படும், 'கருணை மதிப்பெண்' கூட கொடுப்பதற்கில்லை.

கள் விற்பனையை அனுமதிப்பீர்களா

கள் விற்பனையை அனுமதிப்பீர்களா

நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கள் விற்பனைக்கு அனுமதி அளிப்பீர்களா?

கள் விற்பனைக்கு அனுமதி அளிப்பது குறித்து, தொடர்புடைய அனைத்து பிரிவினரிடமும், ஆலோசனை பெற்று பரிசீலிப்போம்.

நீங்கள் வளரவில்லை என்கிறாரே பன்னீர் செல்வம்

நீங்கள் வளரவில்லை என்கிறாரே பன்னீர் செல்வம்

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் பேசும்போது, 'நீங்கள் இன்னும் வளரவே இல்லை' என, உங்களை சொல்லியிருக்கிறாரே?

உண்மை தான். பொருளாதார ரீதியில், தனிப்பட்ட முறையில், நான் இன்னும் வளரவில்லை என்பதை தான், அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, இன்றைய முதல்வரை போல, கோடநாடு எஸ்டேட்டோ, சிறுதாவூர் பங்களாவோ இல்லாமல், தெரு வீடு ஒன்றில் வசித்து வருவதை தான், உண்மையான உணர்வோடு, நான் இன்னும் வளரவில்லை என்று, பன்னீர்செல்வம் கூறியிருப்பதாகக் கருதுகிறேன்.

அம்மா தியேட்டர்

அம்மா தியேட்டர்

மக்களின் பொழுதுபோக்குக்காக, சென்னையில் விரைவில், 'அம்மா' தியேட்டர் கட்டப்படும் என, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனரே?

அ.தி.மு.க.,வினர் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். எந்த அளவிற்கு முதல்வரை பாராட்டுகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு லாபம் உண்டு என்று கருதி தான், இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்கின்றனர். இந்த அறிவிப்பு வெளிவருவதற்குள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், அதற்கு வரவேற்பு தெரிவித்து, அறிக்கையும் வெளிவிட்டனர். ஆனானப்பட்ட நடிகர்கள் சிலரே, பட்டபாட்டிற்கு பின், யாருக்காவது உண்மையான கருத்தை சொல்ல, துணிவு வருமா என்ன?

எம்.பி தேர்தலில் போட்டியிடுவீர்களா...

எம்.பி தேர்தலில் போட்டியிடுவீர்களா...

லோக்சபா தேர்தலில், கட்சிக்காரர்கள், உங்களுக்கும் விருப்ப மனு போட்டிருக்கின்றனர்; தேர்தலில் போட்டியிடுவீர்களா?

என் உயரம் எனக்கு தெரியும் என்று, பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆர்வத்தாலும், என் மீதுள்ள பற்று காரணமாகவும், விருப்ப மனு செய்திருக்கின்றனர்.

பிரதமராகும் ஆசை இல்லை

பிரதமராகும் ஆசை இல்லை

உங்களுக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லையா?

நிச்சயமாக இல்லை!

காங்கிரஸிடமிருந்து தூது வருகிறதா

காங்கிரஸிடமிருந்து தூது வருகிறதா

'காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என்று, பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். பிறகும், காங்., தரப்பில், உங்களுக்கு தொடர்ந்து தூது வந்து கொண்டிருக்கிறதாமே?

பா.ஜ.கவுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைத்து, பல தொந்தரவுகளை செய்து, இறுதியாக அந்த கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகியது. அப்போது, பிரதமராக இருந்த மூத்த தலைவர், வாஜ்பாய், 'நான் இன்று தான் நிம்மதியாக தூங்குவேன்' என்று கூறினார். அந்த அளவிற்கு, அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைந்தபோது, பா.ஜ.,வுக்கு நெருக்கடிகள். ஆனால், தற்போது காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று, நாங்கள் முடிவெடுத்த பிறகும், அந்த கட்சியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்கள், எங்களோடு தோழமையோடு பழகுகின்றனர் என்றால், நாங்கள் பின்பற்றிய, கூட்டணி பண்பாடும், அரசியல் நாகரிகமும் தான் காரணம்.

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை

இத்தனைக்கு பிறகும், காங்கிரசோடு, தி.மு.க., கூட்டணி அமைக்குமா?

பொதுவாக, எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.

விஜயகாந்த், மனைவி விமர்சிக்கிறார்களே

விஜயகாந்த், மனைவி விமர்சிக்கிறார்களே

எங்கள் அணிக்கு தே.மு.தி.க., வந்தால் வரவேற்போம் என, சொல்லி கொண்டிருக்கிறீர்கள். ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி, தொடர்ந்து தி.மு.க.,வை விமர்சிக்கின்றனரே?

அந்த விமர்சனங்களுக்கு, நான் இதுவரையில் பதில் சொல்லவில்லை என்பதை, நீங்கள் அறிந்து தானே இருக்கிறீர்கள்.

முரண்டு பிடிக்கிறாரே விஜயகாந்த்

முரண்டு பிடிக்கிறாரே விஜயகாந்த்

உங்கள் அணியில் இருக்கும் ஜவாஹிருல்லா, திருமாவளவன், எஸ்ரா சற்குணம் என, பலரையும் விஜயகாந்திடம் தூது அனுப்பியும், அவர் தொடர்ந்து முரண்டு பிடிக்கிறாரே?

உங்கள் கேள்வி முற்றிலும் தவறு. இவர்கள் யாரையும், நாங்கள், விஜயகாந்திடம் தூது அனுப்பவில்லை.

எந்த அடிப்படையில் சாமி சொல்கிறார்

எந்த அடிப்படையில் சாமி சொல்கிறார்

பா.ஜகவும், தி.மு.க.,வும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறது என, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, தொடர்ந்து சொல்லி வருகிறாரே?

எந்த அடிப்படையில், அவர் அவ்வாறு சொல்கிறார் என்பதை, அவரிமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மூப்பனாரைத் தடுத்த புகார்

மூப்பனாரைத் தடுத்த புகார்

மூப்பனாருக்கு, பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது, அதை தடுத்தீர்கள் என, தொடர்ந்து உங்கள் மீது, குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய் என்பதை, பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறேன். பிரதமர் பதவியை, மூப்பனாரே விரும்பவில்லை என்பது தான் உண்மை.

திமுகவில் ஜனநாயகம்

திமுகவில் ஜனநாயகம்

'தி.மு.க.,வில் தான் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது' என, நீங்கள் சொல்கிறீர்கள்; ஆனால், தற்போது உட்கட்சி தேர்தலில், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழப்படுகிறதே?

பாதிக்கப்படுவோர், முறைகேடுகள் நடப்பதாக தான் சொல்வர். பொதுத் தேர்தல்களில் கூட, முறைகேடுகள் நடப்பதாக தான், புகார்கள் வருகின்றன. அதனால், இந்தியா ஜனநாயக நாடு இல்லை என்றாகி விடுமா!

சின்னப் பயல் சிதம்பரம்

சின்னப் பயல் சிதம்பரம்

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, ஏற்கனவே, 'சின்னப் பயல் சிதம்பரம்' என, விமர்சித்திருக்கிறீர்கள். அரிசிக்கும் வரி போட்டபோது, உங்கள் விமர்சனம் சரி தான் என, நினைக்க தோன்றியதாக, பலரும் பேசிக் கொள்கின்றனரே?

மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, நான் எப்போதும், நாகரிகக் குறைவாக நடத்தியதோ, பேசியதோ கிடையாது என்பதை, அவர் நன்றாகவே அறிவார். பொய்யை சொல்வதற்கும், ஒரு பொருத்தம் வேண்டாமா! சிதம்பரம் மீது, 'தினமலருக்கு' அப்படி என்ன தான் தீரா கோபமோ! அரிசிக்கான வரியைக் கூட, அவர் திரும்ப பெற்று விட்டாரே!

கனிமொழி முன்னிறுத்தப்படுவாரா...

கனிமொழி முன்னிறுத்தப்படுவாரா...

தேசிய அரசியலில், தி.மு.க.,வின் முகமாக, கனிமொழி முன்னிறுத்தப்படுவாரா?

லோக்சபா, ராஜ்யசபாவில் உள்ள, தி.மு.க., உறுப்பினர்கள் அனைவருமே, தேசிய அரசியலில், தி.மு.க.,வின் முகங்கள் தான். தி.மு.க.,வை பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில், யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை என்பது தான் நிதர்சனம்.

குஷ்புவுக்கு சீட் தரப்படுமா

குஷ்புவுக்கு சீட் தரப்படுமா

நடிகை குஷ்புவுக்கு, லோக்சபா தேர்தலில், 'சீட்' வழங்கப்படுமா?
லோக்சபா தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு எதையும், அவர் தாக்கல் செய்ததாக தெரியவில்லை.

வாரிசுகளுக்கு சீட் உண்டா

வாரிசுகளுக்கு சீட் உண்டா

தி.மு.க., சார்பில், போட்டியிட, வாரிசுகளுக்கு, 'சீட்' வழங்குவீர்களா?

நேர்காணல் முடிந்து, வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும்போது, உங்களுடைய இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+